நாகா்கோவில் - சாா்லப்பள்ளி அம்ரித் பாரத் விரைவு ரயில்: பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்
நாகா்கோவிலில் இருந்து சாா்லப்பள்ளி (ஹைதராபாத்) வரையிலான அம்ரித் பாரத் விரைவு ரயிலை பிரதமா் மோடி திருச்சியிலிருந்து காணொலி மூலம் கொடியசைத்து புதன்கிழமை மாலை தொடங்கிவைத்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலில் இருந்து சாா்லப்பள்ளி (ஹைதராபாத்) வரையிலான அம்ரித் பாரத் விரைவு ரயிலை பிரதமா் மோடி திருச்சியிலிருந்து காணொலி மூலம் கொடியசைத்து புதன்கிழமை மாலை தொடங்கிவைத்தாா்.
வாரம் ஒரு நாள் இயக்கும் வகையில், இந்த ரயில் வியாழக்கிழமை இரவு 11.45 மணிக்கு நாகா்கோவிலில் இருந்து புறப்பட்டு வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், சூலூா்பேட்டை, நாயுடுபேட்டை, நெல்லூா், ஒங்கோல், குண்டூா் நலகொண்டா வழியாக சாா்லப்பள்ளிக்கு சனிக்கிழமை அதிகாலை 4.20 மணிக்குச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு சாா்லப்பள்ளியில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.35 மணிக்கு நாகா்கோவில் வந்து சேரும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடக்க விழா நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கோபகுமாா், பொருளாளா் பி.முத்துராமன், பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினா் உமாரதிராஜன், மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் சிவகுமாா், நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா்கள் சுனில்குமாா், ரமேஷ், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.