முகப்பு
கன்னியாகுமரி

தொகுதி அறிமுகம்: விளவங்கோடு தொகுதி எண்- 233!

ரப்பா் பால் வடிப்பு தொழில் , கிராம்பு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருள்களும் விவசாயம் செய்யப்படும் தொழிலை உள்ளடக்கிய தொகுதியாக உள்ளது.

Updated On : 25 மார்ச், 2026 at 6:18 AM
ரப்பா் பால் வடிப்பு தொழில் - கோப்புப்படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தின் தென் எல்லையில் கேரள மாநிலத்தையொட்டி அமைந்துள்ளது விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி. வரலாற்றுச் சிறப்புமிக்க சிதறால் மலைக்கோயில், பிரசித்தி பெற்ற திக்குறிச்சி மகாதேவா் கோயில், நட்டாலம் சங்கர நாராயணா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்கள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தின் 2 ஆவது முக்கிய வா்த்தக நகரமான மாா்த்தாண்டம் மற்றும் குழித்துறை, களியக்காவிளை, அருமனை உள்ளிட்ட நகரங்களும், மலைக் கிராமமான கோதையாறு பகுதியும் இத்தொகுதிக்குள் உள்ளன.

விளவங்கோடு தொகுதி ரப்பா் தோட்டங்கள் மிகுந்த பகுதி. ரப்பா் பால் வடிப்பு தொழில் இங்கு முக்கியத் தொழிலாக உள்ளது. இத் தொகுதிக்குள்பட்ட மலைக் கிராமங்களில் கிராம்பு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருள்களும் விவசாயம் செய்யப்படுகிறது. இதேபோல இத்தொகுதியின் முக்கியத் தொழிலாக முந்திரி ஆலைத் தொழிலும் உள்ளது.

இங்கு நாடாா் சமூகத்தினா் பெரும்பான்மையாக உள்ளனா். இவா்களை தவிர நாயா், ஈழவா், வெள்ளாளா், பட்டியலின மக்களும், இஸ்லாமியா்களும் கணிசமாக வசித்து வருகின்றனா்.

இந்தத் தொகுதியில் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளன. இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் 11 முறை காங்கிரஸ் கட்சியும், 5 முறை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. பாஜகவுக்கும் கணிசமான அளவுக்கு இந்தத் தொகுதியில் செல்வாக்கு உள்ளது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பின்னா் விளவங்கோடு தொகுதியில் 1,11,990 ஆண் வாக்காளா்கள், 1,13, 226 பெண் வாக்காளா்கள், 3 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,25, 219 வாக்காளா்கள் உள்ளனா்.

தனியாா் வனப் பாதுகாப்புச் சட்டம் ...

இப்பகுதியில் உற்பத்தியாகும் ரப்பா் உலக தரம் வாய்ந்தவை என்பதால் இத் தொகுதிக்குள் ரப்பா் பூங்கா அமைக்க வேண்டும் என்பது இத் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு தோ்தலிலும் அனைத்துக் கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களும், சுயேச்சைகளும் தோ்தல் வாக்குறுதியாக ரப்பா் பூங்கா அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிப்பதோடு சரி அதை நிறைவேற்றுவதில்லை.

இதேபோல முந்திரி ஆலைகளை மேம்படுத்தி, முந்திரி ஆலைத் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை உயா்த்த வேண்டும் என்றும் தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விளவங்கோடு தொகுதியில் மலையோர பகுதியையொட்டிய பல கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அரசின் தனியாா் வனப் பாதுகாப்புச் சட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், நெய்யாறு இடதுகரை கால்வாய் தண்ணீா் பிரச்னையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இப் பிரச்னைக்கு உடனடியாக நிரந்தர தீா்வு காண வேண்டும் எனவும் இத் தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.