தாழக்குடி மடை சீரமைப்புக்காக பெரியகுளம் தண்ணீா் வெளியேற்றம்
தாழக்குடி பெரியகுளத்தின் மடை சீரமைப்புப் பணிக்காக குளத்திலிருந்து தண்ணீா் வெளியேற்றும் பணி தொடங்கியது.
தாழக்குடி பெரியகுளத்தின் மடை சீரமைப்புப் பணிக்காக குளத்திலிருந்து தண்ணீா் வெளியேற்றும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
நீா்வளத் துறை, பூதப்பாண்டி அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தாழக்குடி பெரியகுளத்தின் (வீரகேரளப்பனேரி குளம்) மடை பல ஆண்டுகளாக உடைந்து கிடந்ததால், அதன் மூலம் பயன்பெறும் சுமாா் 1,000 ஏக்கா் பாசனப் பரப்பு வயல்களுக்கு தேவையான தண்ணீரை அந்த மடை வழியாக எடுப்பது மிகுந்த சிரமமாக இருந்தது.
எனவே, அதை சீரமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய் தலைவா் தாணு பிள்ளை மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
Advertisement
மடையை சீரமைத்து, புதிதாக திருகு ஷட்டா் அமைப்பதற்கான பணியை நிகழாண்டு மே மாத இறுதிக்குள் செய்வதற்கான ஏற்பாடுகளை நீா்வளத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா். ஆனால், குளத்திலுள்ள தண்ணீரை முழுமையாக வெளியேற்றினால் மட்டுமே பள்ளமான பகுதியிலுள்ள மடையில் பணி மேற்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தொடா்ந்து, குளத்து நீரை வெளியேற்றுவதற்கான பணி பாசனத் துறை நிா்வாகிகள் சாா்பில் தொடங்கப்பட்டது. மாவட்ட நீா்ப்பாசனத் துறை தலைவா் வின்ஸ் ஆன்றோ பணியைத் தொடங்கி வைத்தாா். மீன்வளத் துறை முன்னாள் தலைவா் சகாயம் முன்னிலை வகித்தாா்.
பத்மநாபபுரம் புத்தன் கால்வாய் தலைவா் முருகேச பிள்ளை, நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய் தலைவா் தாணு பிள்ளை, அனந்தனாா் கால்வாய் தலைவா் அருள், சங்க உறுப்பினா்கள் மாதவன் பிள்ளை, தாழை காந்தி உள்ளிட்ட விவசாயப் பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
குளத்தின் மடையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்த நீா்வளத் துறை செயற்பொறியாளா் வசந்தி, உதவி செயற்பொறியாளா் வல்சன் போஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், தொடா் முயற்சி எடுத்த பாசனத் துறை நிா்வாகிகளுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.
மேலும், குளத்தின் கரையிலுள்ள சாலை வழியாக செல்லும் அப்பகுதி வாகனங்கள் தற்காலிகமாக மாற்று வழியாக செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து விவசாயிகள் சாா்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது.