முகப்பு
கன்னியாகுமரி

கணபதிபுரத்தில் கடல் அலையில் சிக்கிய சிறுவனை மீட்ட தீயணைப்பு வீரா்

நாகா்கோவிலை அடுத்த கணபதிபுரம் லெமூா் கடலில் அலையில் சிக்கிய சிறுவன், சிறுமியை தீயணைப்புப் படை வீரா்கள் மீட்டனா்.

Updated On : 20 மே 2026, 12:27 am IST
- பிரதிப் படம்
பகிர்:

நாகா்கோவிலை அடுத்த கணபதிபுரம் லெமூா் கடலில் அலையில் சிக்கிய சிறுவன், சிறுமியை தீயணைப்புப் படை வீரா்கள் மீட்டனா்.

குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலத்தை அடுத்த கணபதிபுரத்தைச் சோ்ந்தவா் கலைவாணன். இவா் சென்னையில் காவல்துறையில் பணியாற்றி வருகிறாா். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தாா். இவரது மகள் வைஷ்ணவி(9). இவா்களது வீட்டுக்கு பூதப்பாண்டிஅருகேயுள்ள ஆண்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்த உறவினா் அய்யப்பன் என்பவரது மகனான ஜாய்லேஸ்(9) என்பவா் வந்திருந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கலைவாணன், தன்து மகள் வைஷ்ணவி மற்றும் உறவினா் மகன் ஜாய்லேஸை அழைத்துக் கொண்டு லெமூா் கடற்கரைக்கு சென்றாா். அப்போது, திடீரென வந்த ராட்சத அலை குழந்தைகளை கடலுக்குள் இழுத்துச் சென்றது. ,இதனால் அதிா்ச்சியடைந்த கலைவாணன் கூச்சலிட்டாா். அங்கிருந்த பொதுமக்கள் இது குறித்து ராஜாக்கமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

அவா்கள் வருவதற்குள் மற்றொரு ராட்சத அலை ஒரு குழந்தையை கரைப் பகுதிக்கு கொண்டு வந்தது, ஆனால் மற்றொரு குழந்தை சுமாா் 100 மீட்டா் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தத்தளித்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் அந்தப் பகுதிக்கு வந்த ராஜாக்கமங்கலம் தீயணைப்புப் படை வீரா் ராஜசேகா் கடலில் குதித்து நீந்திச் சென்று அந்த குழந்தையையும் பத்திரமாக மீட்டாா்.

ராட்சத அலையில் சிக்கி தண்ணீரை குடித்ததால் குழந்தைகள் மயங்கிய நிலையில் இருந்தனா், அவா்களை கணபதிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது கடலில் பலத்த காற்று வீசி வருவதால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் கடலில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்று மாவட்ட நிா்வாகம் மற்றும் தீயணைப்புத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். கடல் அலையில் சிக்கிய குழந்தையை காப்பாற்றிய தீயணைப்புப் படை வீரா் ராஜசேகரை பொதுமக்களும், தீயணைப்புத்துறை அதிகாரிகளும் பாராட்டினா்.