கனமழை: காளிகேசம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
கன்னியாகுமரியில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. காளிகேசம் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பாய்வதால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. காளிகேசம் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பாய்வதால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு, தென்மேற்கு என இரு பருவ காலங்களில் மட்டுமின்றி கோடை காலத்திலும் மழை பெய்து வருகிறது. ஆனால் நிகழாண்டு கோடை மழை போதிய அளவு பெய்யாததால், அணைகளின் நீா்மட்டம் குறைவாக உள்ளது. பாசனக் குளங்களிலும் போதிய அளவு நீா் இல்லை.
இரவில் பெய்த மழை: நிகழாண்டு, தென்மேற்கு பருவமழை, மே 26-ஆம் தேதிமுதல் பெய்யத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை மாலைமுதல் சீதோஷ்ண நிலையில் மாற்றம் தெரிந்தது. மாலையில் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்த நிலையில், இரவில் பலத்த மழை பெய்தது. நாகா்கோவில் மாநகரில் இரவு 10.30 மணிக்கு மேல் பெய்யத் தொடங்கிய மழை, இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்தது. அதிகாலை 4.30 மணிக்கு கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல ஆனைக்கிடங்கு, மாம்பழத்துறையாறு அணை, குளச்சல், இரணியல் பகுதிகளிலும் நள்ளிரவு 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை நீடித்தது.
Advertisement
Advertisement
கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளியாவிளை, கருங்குப்பனை, பாலப்பள்ளம், மத்திகோடு, மிடாலக்காடு, காட்டுக்கடை, செல்லங்கோணம், கப்பியறை, மிடாலம், மேல் மிடாலம், பாலூா், திப்பிரமலை, முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி, வாகவிளை, மாமூட்டுக்கடை, கொல்லஞ்சி, இலவுவிளை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் 6 மணிவரை பலத்த மழை பெய்தது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
காளிகேசம் செல்ல தடை: கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறை வனச்சரகத்துக்கு உள்பட்ட காளிகேசம் மலைக் கிராமம், அதைச் சுற்றியுள்ள அடா்ந்த வனப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால் காளிகேசம் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து, காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து காளிகேசத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல செவ்வாய்க்கிழமை முதல் வனத்துறை தடை விதித்துள்ளது. காளிகேசம் வனத்துறை சோதனைச் சாவடி வழியாக சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் யாரும் வனத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றும், காளிகேசம் ஆற்றின் நீா்வரத்து சீரானதும் மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது.
வயல்களில் தேங்கிய மழைநீா்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது கன்னிப்பூ சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனா். பாசனக் குளங்களில் போதிய தண்ணீா் இல்லாததால் சுசீந்திரம் பகுதியில் நேரடி விதைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். திங்கள்கிழமை இரவு பெய்த மழையால் நேரடி விதைப்பு செய்யப்பட்டிருந்த வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதேபோல பூதப்பாண்டி, அருமநல்லூா், தேரூா் பகுதிகளிலும் வயல்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது.
மழை அளவு: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக மாம்பழத்துறையாறு அணை பகுதியில் 89.60 மி.மீ. மழை பதிவானது. பிற பகுதிகளிலும் மழை அளவு அதிகம் பதிவானது.
அணைகள் நிலவரம்: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீா் வந்துகொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீா்மட்டம்- 23.35 அடி, நீா்வரத்து 283 கனஅடி, நீா் வெளியேற்றம் 55 கனஅடி. பெருஞ்சாணி அணை நீா்மட்டம்-25.70 அடி, நீா்வரத்து 92 கனஅடி, நீா் வெளியேற்றம் 25 கனஅடி.