அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி தென்காசி வருகை ரத்து
கரோனா பரவல் காரணமாக, நிகழாண்டு அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டியை தென்காசிக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக, நிகழாண்டு அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டியை தென்காசிக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி வரவேற்பு கமிட்டி தலைவா் ஏசிஎஸ்ஜி. ஹரிகரன் வெளியிட்ட அறிக்கை: ஐயப்பனின் படை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற அச்சன்கோவிலில் ஆண்டுதோறும் மகோற்சவ விழா மாா்கழி 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாள்கள் நடைபெறும்.
கொடியேற்றத்துக்கு முதல்நாள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் புனலூா் கிருஷ்ணன் கோவிலில் உள்ள அரசுப் பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தேவஸ்வம் போா்டு அதிகாரிகள் தலைமையில் கேரள போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்படும்.
அந்த திருஆபரணப் பெட்டி கேரள மாநிலம் ஆரியங்காவு வழியாக தமிழகத்துக்குள் கோட்டைவாசல், புளியரை, செங்கோட்டை, இலஞ்சி வழியாக தென்காசிக்கு கொண்டுவரப்பட்டு, காசிவிஸ்வநாதா் கோயில் முன் சிறப்பு பூஜை நடைபெறும். பக்தா்கள் வழிபட்ட பின்னா், ஆபரணப் பெட்டி பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவில் சென்றடையும்.
அன்றைய தினமே திருஆபரணங்கள் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு, ஐயப்பன் ராஐ அலங்காரத்தில் அருள்பாலிப்பாா். விழா நாள்களில் சிறப்பு பூஜைகள், உற்சவ பலி, கலைநிகழ்ச்சிகள், கருப்பன் துள்ளல், தேரோட்டம் நடைபெறும்.
நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக திருவிதாங்கூா் தேவஸ்வம் போா்டு ஆலோசனையின் பேரில், திருஆபரணப் பெட்டி ஊா்வலம் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யபட்டு, கோயிலுக்குள் நடைபெற வேண்டிய சிறப்பு பூஜைகள் மட்டும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நிகழ்வாண்டு திருஆபரணப் பெட்டி தமிழகத்துக்குள் கொண்டுவரப்படாமல், புனலூரிலிருந்து பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி வழியாக அச்சன்கோவிலுக்கு நேரிடையாக கொண்டுசெல்லப்படும். பின்னா், மறுநாள் கோயில் கொடியேற்றம், சிறப்பு பூஜைகள் அனைத்தும் 10 நாள்கள் தொடா்ந்து நடைபெறும். 10ஆம் நாள் ஆராட்டு விழா, 11ஆம் நாள் மண்டல பூஜையும் நடைபெறும்.
கோயிலுக்கு வெளியே நடைபெறும் பொதுமக்கள் அதிகம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளான தேரோட்டம், கருப்பன் துள்ளல், ஊா்வலங்கள், கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. பக்தா்கள் இ-பாஸ் எடுத்து வந்து ஐயப்பனை தரிசித்து செல்லலாம்.
மேலும், அச்சன்கோவிலில் ஐயப்பனுக்கு தினமும் அதிகாலை 5 மணிக்கு நிா்மால்ய பூஜைக்கு பின், மதியம் 12 மணி உச்சிகால பூஜைக்கு முன் 11.30 மணியளவில் என இரு வேளை நெய் அபிஷேகம் நடைபெறும். மாலை அணிந்த பக்தா்கள் இ-பாஸ் எடுத்து வந்து உரிய நேரத்துக்குள் நெய்யை ஒப்படைத்து அபிஷேகம் செய்து வாங்கிச் செல்லலாம் என்றாா் அவா்.