வனத்துறை விசாரணைக்குச் சென்ற விவசாயி பலி: 5ஆவது நாளாக உடலை வாங்க மறுப்பு
கடையம் அருகே உள்ள வாகை குளத்தைச் சேர்ந்த விவசாயி வனத்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்தார்.
கடையம் அருகே உள்ள வாகை குளத்தைச் சேர்ந்த விவசாயி வனத்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் உடலை வாங்காமல் 5ஆவது நாளாக மப்புத் தெரிவித்துவருகின்றனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாய் குலத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து (72). தனது தோட்டத்தில் காய்கறி பயிரிட்டிருந்தார். மேலும் அவர் பயிர் பாதுகாப்பிற்காக தோட்டத்தைச் சுற்றிலும் உரிய அனுமதியின்றி மின்வேலி அமைத்திருந்ததையடுத்து அது குறித்தத் தகவலறிந்த வனத்துறையினர் ஜூலை 22ஆம் தேதி இரவு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென அணைக்கரைமுத்துவிற்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதையடுத்து வனத்துறையினர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அணைக்கரை முத்து உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து ஜுலை 23 வியாழக்கிழமை அணைக்கரை முத்து உறவினர்கள் வனத்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறி ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனிடையே அணைக்கரை முத்து மகன் நடராஜன் கொடுத்தப் புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலிசார் வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நீதிபதி விசாரணைக்குப் பரிந்துரைத்தனர். இதையடுத்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி கார்த்திகேயன் வியாழக்கிழமை மாலை உறவினர்களிடம் விசாரணை செய்த நிலையில் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரேதப் பரிசோதனைக்கு உறவினர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து சனிக்கிழமை காலை நீதிபதி கார்த்திகேயன் வனத்துறையினர் மற்றும் மின் வாரிய ஊழியர்களிடம் விசாரணை செய்தார். சனிக்கிழமை மாலை தமிழக முதல்வர் 10 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அறிவித்தார். ஆனால் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் முதல்வரின் அறிவிப்பை ஏற்க மாட்டோம் என்று மறுத்தனர். தொடர்ந்து வருவாய்த்துறையினர் பேச்சு நடத்திய போதும் கண்டிப்பாக வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆரம்ப கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையை வழங்க வேண்டும். அது வரை உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து திங்கள்கிழமை காலை திமுக மாவட்டச் செயலர் ஆவுடையப்பன், தென்காசி நாடளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் அணைக்கரைமுத்து உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அவர்களிடம் அணைக்கரை முத்து உறவினர்கள் வனத்துறையினர் மற்றும் போலீசார் மீது கடுமையானக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர். அவர்களிடம் தங்களின் சட்டப் போராட்டத்திற்கு தி.மு.க.துணையாக இருக்கும் என்று மாவட்டச் செயலர் ஆவுடையப்பன் கூறினார்.