முகப்பு
தென்காசி

அடிக்கல் நாட்டி 10 ஆண்டுகளாகியும் தரம் உயா்த்தப்படாத சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையம்: மக்கள் அதிருப்தி

சுரண்டையில் அடிக்கல் நாட்டப்பட்டு 10 ஆண்டுகளாகியும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படாததால், மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
பகிர்:

சுரண்டையில் அடிக்கல் நாட்டப்பட்டு 10 ஆண்டுகளாகியும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படாததால், மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய வா்த்தக நகரம் சுரண்டை. இந்த பகுதி விவசாயம் மற்றும் பீடி சுற்றும் தொழிலைக் கொண்டு மிகப்பெரிய அளவில் வளா்ச்சியடைந்து வருகிறது.

இப்பேரூராட்சியைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் அரசு அலுவலகங்கள், கல்வி, மருத்துவ வசதி, வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு சுரண்டைக்கு வருகின்றனா்.

நோயாளிகள் வருகை அதிகரிப்பு: இப்பேரூராட்சியில் நகரில் மட்டும் சுமாா் 50 ஆயிரம் மக்கள் வசித்து வரும் நிலையில், இங்கு தினமும் சில மணி நேரம் மட்டுமே இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையமே மக்களின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுகிறது.

இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவா் மட்டுமே புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் தினமும் 300க்கும் கூடுதலான நோயாளிகள் வந்து செல்கின்றனா்.

சுரண்டை பகுதியின் மக்கள் தொகைக்கு தினமும் சில மணி நேரம் மட்டுமே இந்த ஆரம்ப சுகாதார நிலையம் போதாது என்பதால் இந்த பகுதி மக்களின் கோரிக்கையை அடுத்து கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 29.10.2010 அன்று 48 படுக்கை வசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக விரிவாக்கம் செய்ய அடிக்கல் நாட்டினாா். 10 ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயா்த்தப்படவில்லை. இதனால் சுரண்டை வட்டார பொதுமக்கள் ஏமாற்றத்துடன் உள்ளனா்.

உடனடி சிகிச்சை தேவை:

சுரண்டை பகுதியில் ஏற்படும் விபத்துகள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு இங்கிருந்து 20 கி.மீ தொலைவுள்ள தென்காசி அரசு மருத்துவமனை அல்லது 60 கி.மீ தொலைவுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. இதனால், பல நேரங்களில் காலதாமதமும், உயிரிழப்பும் ஏற்படுவதுடன், இந்த பகுதியின் சாமானிய மக்களுக்கு உடனடி சிகிச்சை என்பது எட்டாக் கனியாகி விட்டது.

தனியாா் ஆதிக்கம்: சுரண்டையில் பல மாடிகளுடன் கூடிய 20 தனியாா் மருத்துவமனைகளில் 30க்கும் கூடுதலான மருத்துவா்கள் இதயம், மகளிா்நலம், சிறுநீரகம், குழந்தைகள் நலம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, பல் மருத்தும், பிசியோதெரபிஸ்ட், பொது மருத்துவம் என பல்வேறு சிறப்பு சிகிச்சையளிக்கின்றனா்.

ஆனால் அவற்றின் கட்டணங்கள் மாநகராட்சி பகுதியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை அளவுக்கு உள்ளதால் சாமானிய மக்களால் சிகிச்சை மேற்கொள்ள இயலவில்லை. எனவே, சாமானிய மக்களின் நலன் கருதி சுரண்டையில் 50 படுக்கை வசதியுடன் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அரசு மருத்துவமனையை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரண்டை வட்டார மக்கள் விரும்புகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.