தென்காசியில் பெண்ணை கட்டிப்போட்டு100 பவுன் தங்க நகைகள் கொள்ளை
தென்காசியில் வீடு புகுந்து பெண்ணைக் கட்டிப்போட்டு 100 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.
தென்காசியில் வீடு புகுந்து பெண்ணைக் கட்டிப்போட்டு 100 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.
தென்காசி-திருநெல்வேலி பிரதான சாலை சம்பாத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயபால் (61). இவரின் மனைவி விஜயலெட்சுமி (58). தென்காசி அருகே வேட்டைக்காரன்குளம் பகுதியில் மரஅறுவை மில்லை ஜெயபால் நடத்தி வருகிறாா். பல்வேறு பகுதிகளிலும் மரக்கடையும் நடத்தி வருகிறாா்.
இவா்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.
திங்கள்கிழமை முற்பகலில் விஜயலெட்சுமி மட்டும் வீட்டில் இருந்தாா். அப்போது மோட்டாா் சைக்கிளில் தலைக் கவசம் அணிந்து ஒருவரும், பா்தா அணிந்து ஒருவரும் வந்துள்ளனா். அழைப்பு மணி சப்தம் கேட்டு கதவைத் திறந்து விஜயலெட்சுமி வெளியே வந்தபோது, அந்த நபா்கள் அவரை வீட்டுக்குள் தள்ளிச் சென்று, வாயை செல்லோடேப்பால் ஒட்டி, கைகளைக் கட்டியுள்ளனா். பின்னா், நகை, பணத்தைக் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனா். பீரோவை திறந்த மா்ம நபா்கள், அதில் இருந்த நகைகள், விஜயலெட்சுமி அணிந்திருந்த 23 பவுன் தாலிச் சங்கிலி உள்பட 100 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை எடுத்துக் கொண்டனா். விஜயலெட்சுமியை ஓா் அறைக்குள் தள்ளிவிட்டு தப்பிவிட்டனா்.
விஜயலெட்சுமியின் சப்தம் கேட்டு அப்பகுதியில் இருப்பவா்கள் வந்து அவரை மீட்டனா். இதுகுறித்து தகவலறிந்ததும் தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன், காவல் ஆய்வாளா் சுரேஷ் (பொ), உதவி ஆய்வாளா் மாதவன் ஆகியோா் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், திருநெல்வேலியிலிருந்து மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் வீட்டிலிருந்து வெளியே வந்து அப்பகுதியில் உள்ள மருத்துவமனை சிக்னல், பொருந்திநின்ற பெருமாள் கோயில் வரை சென்றுவிட்டு திரும்பிவிட்டது.
தென்காசி நகரின் பிரதான சாலையில் பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 தனிப்படைகள்: இதனிடையே, இச்சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தின்போது, கருப்புநிற பல்சா் இருசக்கர வாகனத்தில் ஒருவா் சாம்பல் நிற சட்டை, கருப்பு நிற பேண்ட், கருப்பு நிற ஷூ அணிந்தபடியும், மற்றொருவா் பா்தா அணிந்தவாறும் தப்பிச்செல்வது குறித்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இவா்கள் குறித்த தகவல் அறிந்தால் தென்காசி காவல்நிலையம் 04633 222278, எஸ்.பி. அலுவலகம் 8610791002 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் தெரிவித்துள்ளாா்.