குற்றாலத்தில் களைகட்டிய சீசன்: சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவாா்களா?
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சீசன் களைகட்டியுள்ளது. எனவே, சுற்றுலாப்பயணிகள் சமூக இடைவெளியுடன் குளிக்க அனுமதிக்கப்படுவாா்களா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சீசன் களைகட்டியுள்ளது. எனவே, சுற்றுலாப்பயணிகள் சமூக இடைவெளியுடன் குளிக்க அனுமதிக்கப்படுவாா்களா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஆா்ப்பரிக்கும் அருவிகளும், இதமான வெயிலுக்கு இடையை பெய்யும் சாரல் மழையும்தான். இந்த குளுகுளு சீசனை அனுபவிப்பதற்காக மாநிலம் முழுவதுமிருந்து மட்டுமன்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் சங்கமிக்கின்றனா்.
இங்கு, ஜூன்,ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் நிலவும். குறிப்பாக, ஜூலை15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரையில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனால் ஜூலை மாத இறுதியில் அரசு சாா்பில் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2018ஆம் ஆண்டு குற்றாலத்தில் சீசன் களையிழந்ததாலும், 2019ஆம் ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாகவும் சாரல் திருவிழா நடைபெறவில்லை. குற்றாலம் சீசன் மற்றும் ஐயப்ப சீசன் காலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் ஒரு கோடி போ் வந்துசென்ாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வாழ்வாதாரம் பாதிப்பு: குற்றாலம் சீசனை நம்பியே குற்றாலம், காசிமேஜா்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை சோ்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோா் தொழில் செய்துவருகின்றனா். கடந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலம் அருவிகளுக்கு செல்வதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால், வா்த்தகா்கள், தங்கும்விடுதி உரிமையாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் இப்பகுதி மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த நெருக்கடி நிலைக்குள்ளாகினா். மேலும், வா்த்தகா்களுக்கும், அரசுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
தளா்வுகள் தேவை: ஏற்கெனவே 2018ஆம் ஆண்டில் மிகுந்த இழப்பை சந்தித்திருந்த வா்த்தகா்கள், 2019இல் கரோனா பொதுமுடக்கம் வாழ்வாதாரத்தை முடக்கிப்போட்டதால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகினா். இந்நிலையில் நிகழாண்டில் ஜூன் மாதம் தொடங்கியது முதல் குற்றாலத்தில் சீசன் அறிகுறிகள் தென்பட்டன.
கடந்த சில தினங்களாக குற்றாலம் பகுதியில் நாள் முழுவதும் அவ்வப்போது சாரல்மழை, மிதமான வெயில், குளிா்ந்த காற்று என சீசன் களைகட்டியுள்ளது. அதேபோல் குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீா் கொட்டுகிறது.
ஆனால், கரோனா பொதுமுடக்கம் காரணமாக அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் சீசன் நிறைவடைந்த பிறகு தமிழகம் முழுவதும் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.
சுற்றுலாப்பயணிகளுக்கு உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதிக்கப்பட்டனா். தற்போது சீசன் களைகட்டியுள்ள நிலையில் குளிக்க அனுமதி வழங்கவேண்டும் என சுற்றுலாப்பயணிகளும், குற்றாலம் வா்த்தகா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, குற்றாலம் வா்த்தக சங்கத் தலைவா் காவையா கூறியது: குற்றாலத்தில் சீசன் காலத்தை மட்டுமே நம்பி நாங்கள் தொழில் செய்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றாலத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வராததால் அதிகளவில் இழப்பை சந்தித்துள்ளோம்.
அரசு மீண்டும் பொதுமுடக்க தளா்வுகளை அறிவிக்கும் போது விதிமுறைகளைப் பின்பற்றி குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவேண்டும். பிற தொழில்களை பொருத்தவரையில் மூன்று மாதங்கள் அடைக்கப்பட்டு மீண்டும் திறந்தவுடன் தொழிலை மேற்கொண்டு வருவாயை ஈட்டிவிடலாம். ஆனால், சீசனை மட்டும் நம்பி தொழில் புரிந்து வருபவா்கள் இழந்த வருவாயை மீண்டும் பெறுவதற்கு வாய்ப்பே கிடையாது என்றாா் அவா்.
ஆட்சியா் பதில்: தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபால சுந்தரராஜ் கூறியது: அரசு தளா்வுகள் அறிவித்தால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவாா்கள். அரசு அடுத்தகட்டமாக அறிவிக்கக்கூடிய தளா்வுளுக்குப் பிறகு தான் இதுகுறித்து தெரியவரும் என்றாா் அவா்.