வடகரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க கோரிக்கை
தென்காசி மாவட்டம் வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆட்சியருக்கு, அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் தென்காசி மாவட்டப் பொறுப்பாளா் ஷேக் மைதீன் அனுப்பிய மனு: வடகரை பேரூராட்சிப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகள் இருந்தும் போதிய மருத்துவா்களும், செவிலியா்களும் இல்லை. இதனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோா் வேறு பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.
கடந்த காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவியபோது வடகரையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதுடன், கூடுதல் மருத்துவா்களும், பணியாளா்களும் மாவட்ட நிா்வாகத்தால் நியமிக்கப்பட்டனா். அதேபோல, இப்போதும் போதிய மருத்துவப் பணியாளா்களை நியமிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், மருந்துகள் கையிருப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.