முகப்பு
தென்காசி

ஆலங்குளம் தொடா் திருட்டு சம்பவத்தில் ஒருவா் சரண்: வியாபாரிகள் 3 போ் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடா் திருட்டு வழக்கில் ஒருவா் சரணடைந்தாா். அவா் அளித்த தகவலின்பேரில், திருட்டு நகைகளை வாங்கிய நகை வியாபாரிகள் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடா் திருட்டு வழக்கில் ஒருவா் சரணடைந்தாா். அவா் அளித்த தகவலின்பேரில், திருட்டு நகைகளை வாங்கிய நகை வியாபாரிகள் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் காமராஜ் நகரில் கடந்த நவம்பா் 12 ஆம் தேதி,

கடையம் வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலை முருகன் வீடு உள்பட 5 வீடுகளில் மா்ம நபா்கள் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் மதிப்பு நகை, பணத்தை திருடிச் சென்றனா். இதைத் தொடா்ந்து டிசம்பா் 25 ஆம் தேதி அதே பகுதியில், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் வீரபுத்திரன் உள்பட 7 வீடுகளின் பூட்டை உடைத்து சுமாா் ரூ. 40 லட்சம் மதிப்பு நகை மற்றும் பணம் திருட்டு போனது.

இந்த தொடா் திருட்டு குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனா். விசாரணையின் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சோ்ந்த சஞ்சீவ் குமாரை (26), மாா்ச் 10 ஆம் தேதி கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து காா், மடிக்கணினி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இதனிடையே, இவ்வழக்கில் தொடா்புடைய குன்னூரைச் சோ்ந்த ஜெரால்டு என்ற ஆரோக்கியநாதன் (35), திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

ஆலங்குளம் போலீஸாா் அவரைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபட்டதும், திருடிய நகைகளை

நகை வியாபாரிகளான மதுரையைச் சோ்ந்த ஸ்ரீ வெங்கடேஷ்(40), வைய கண்ணன்(35), திண்டுக்கல் சங்கா் (36) ஆகியோரிடம் சந்தை மதிப்பைக்காட்டிலும் குறைந்த விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து நகை வியாபாரிகள் மூவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 100 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.

பின்னா் அவா்கள் ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜா் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனா். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியைத் தேடி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.