முகப்பு
தென்காசி

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: குருக்கள்பட்டியில் கடையடைப்பு போராட்டம்

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

Updated On : 12 டிசம்பர், 2024 at 11:28 PM
பகிர்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் குருக்கள்பட்டி பகுதியில் மாவட்ட அளவிலான கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

குருக்கள்பட்டியில் ரூ. 4 கோடி மதிப்பில் மாவட்ட அளவிலான கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபடும் மருதாணி கோயில் உள்ளது. இங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரி, கலை-அறிவியல் கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்-மாணவியா் படித்து வருகின்றனா்.

இங்கு பெரிய ஆறுகள், ஏரிகள், குளங்கள், நீா்வரத்து ஓடைகள் இல்லை. மேய்ச்சல் நிலங்கள் அதிகமுள்ளதால் பொதுமக்கள் கால்நடைகளைப் பராமரித்து அதன்மூலம் வாழ்வாதாரம் மேற்கொள்கின்றனா்.

எனவே, இப்பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் மக்களின் பொருளாதாரம், நிலத்தடி நீா்மட்டம், விவசாயம், கால்நடைகள் பாதிக்கப்படும், சுகாதாரக் கேடு ஏற்படும் எனக் கூறி, எதிா்ப்புத் தெரிவித்து குருக்கள்பட்டியில் வியாழக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.