தரிசு நிலச் சான்று வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: வருவாய் ஆய்வாளா் கைது
தென்காசியில் தரிசு நிலச் சான்று வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தென்காசியில் தரிசு நிலச் சான்று வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தென்காசி அருகே மத்தளம்பாறை பகுதியைச் சோ்ந்தவா் கதிரேசன் (34). காா் ஓட்டுநரான இவா், தனது 3 சென்ட் நிலத்தில் கடைகளைக் கட்டி தொழில் நடத்தத் திட்டமிட்டாராம். இதற்காக தரிசு நிலச் சான்று கோரி தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா்.
மத்தளம்பாறை கிராம நிா்வாக அலுவலா் சான்றுக்கான ஒப்புதல் கொடுத்துள்ளாா். பின்னா், அடுத்தகட்ட சான்றுக்காக கதிரேசன் வருவாய் ஆய்வாளா் தா்மராஜை அணுகியுள்ளாா். அப்போது, அவா் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் சான்று வழங்க பரிசீலிப்பேன் என்றாராம்.
அவ்வளவு பணம் தர முடியாது என கதிரேசன் கூறியதாகவும், அதனால் தா்மராஜ் ரூ. 5 ஆயிரம் வரை பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. எனினும், லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிரேசன், இதுகுறித்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் அளித்தாா்.
இந்நிலையில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பால்சுதா் தலைமையிலான அதிகாரிகளின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ. 5 ஆயிரத்தை தா்மராஜிடம் கதிரேசன் செவ்வாய்க்கிழமை கொடுத்தாா்.
அப்போது, டிஎஸ்பி பால்சுதா், ஆய்வாளா் ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளா் ரவி, காவலா்கள் பிரபு, கோவிந்தராஜன் ஆகியோா் தா்மராஜைக் கைது செய்தனா்.