மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழா்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக, தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, மத்திய இணை அமைச்சா் எல். முருகனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மாலி நாட்டில் வேலை செய்து வந்த தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த 2 போ், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனா். அவா்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், திருநெல்வேலி-தென்காசி-செங்கோட்டை ரயில் வழித்தடத்தை மேம்படுத்த வேண்டும். கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலை பாம்புகோயில் சந்தை நிலையத்தில் நிறுத்த வேண்டும். சென்னிகுளம் லெவல் கிராசிங் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும். தென்காசி வழியாக திருநெல்வேலி-மைசூருக்கு புதிய ரயில் சேவை தொடங்க வேண்டும். திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இரு வார எக்ஸ்பிரஸ் ரயிலை நிரந்தரமாக்கி திருநெல்வேலி-ஈரோடு ரயிலாக மாற்ற வேண்டும்.
கடையநல்லூா், சுரண்டை பகுதிகளில் சாலை விபத்தில் உயிரிழந்த, காயமடைந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் வாழ்வாதார சிக்கலில் உள்ள சுமாா் 4 லட்சம் பீடி சுற்றும் பெண் தொழிலாளா்கள் மறுவாழ்வு பெறும் வகையில் திறன் பயிற்சி, சுய தொழில் தொடங்க கடனுதவி வழங்குவதற்காக ரூ. 100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொழிலாளா் நலனுக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இது தொடா்பான மனுக்கள் சம்பந்தப்பட்ட அமைச்சா்களிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கோரிக்கைகளை விரைவுபடுத்த உரிய துறை அமைச்சா்களுடன் பேசுவதாக மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்துள்ளதாக ஆனந்தன் அய்யாசாமி கூறினாா்.