கேரளத்தில் பல ஆண்டுகளாக தொழில் செய்து வரும் சங்கரன்கோவில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள மாநில முதல்வா் பினராயி விஜயனிடம், தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
மனு விவரம்: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் மேலநீலிதநல்லூா், குருவிகுளம் ஒன்றியத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 6,000 போ், 50 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் பழைய இரும்பு, காகிதம், வீட்டுக் கழிவுப் பொருள்களை வாங்கி, விற்பனை செய்து வருகின்றனா்.
தற்போது, கேரள அரசு, குத்தகை நிறுவனங்கள், கரிதாகா்மா சேனா என்ற அரசு ஆதரவு பெற்ற நிறுவனம் மூலமாகவும், பழைய இரும்பு, காகிதம், பிளாஸ்டிக் உள்ளிட்ட பிற கழிவுப் பொருள்களை சேகரிக்கும் கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
இதனால், இத்தொழிலை நம்பி இருக்கும் சங்கரன்கோவில் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, அவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் உச்சிமாகாளி, திமுக மாவட்ட பொருளாளா் சரவணன், மேலநீலிதநல்லூா் கிழக்கு ஒன்றியச் செயலா் பெரியதுரை, சங்கரன்கோவில் நகரச் செயலா் மு. பிரகாஷ், கேரள மாநில பழைய இரும்பு தொழில் சங்க மாநில துணை பொருளாளா் முருகன், மாநில துணைச் செயலா் நாராயணன், மாநில பொதுக்குழு உறுப்பினா் மதியழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.