திருநெல்வேலி

மதுரைக்குத் தெற்கே எல்லாமே அழகிரி?

 திருநெல்வேலி, மே 28: மத்திய அமைச்சரவை விரிவாக்கம் முடிவடைந்துள்ள நிலையில், மதுரைக்கு தெற்கே மத்திய அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாததால் இனிமேல் எல்லாம் மு.க. அழகிரிதான் என்ற நிலை ஏற்பட

ப. இசக்கி

 திருநெல்வேலி, மே 28: மத்திய அமைச்சரவை விரிவாக்கம் முடிவடைந்துள்ள நிலையில், மதுரைக்கு தெற்கே மத்திய அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாததால் இனிமேல் எல்லாம் மு.க. அழகிரிதான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 மத்தியில் அமைந்துள்ள புதிய அரசின் அமைச்சரவையில் முதலில் பிரதமரும், 19 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றனர்.

 அதில், தமிழகத்தின் தென்பகுதியின் பிரதிநிதித்துவம் என்ற வகையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் (சிவகங்கை) மட்டுமே இடம் பெற்றிருந்தார்.

 வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் கேபினட் மற்றும் இணை அமைச்சர்கள் 59 பேர் பதவியேற்றுள்ளனர். இவர்களில், தென் மாவட்டங்களின் பிரதிநிதியாக திமுகவைச் சேர்ந்த மதுரை எம்.பி.யும் முதல்வர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

 தென்கோடி மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் எம்.பி. மாணிக்க தாகூர், திருநெல்வேலி எம்.பி. எஸ். ராமசுப்பு, கடைசி நேரத்தில் பரிந்துரைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட திண்டுக்கல் எம்.பி. சித்தன் ஆகியோரில் இருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என அக் கட்சியினர் எதிர்பார்த்தனர்.

 எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும் வகையில், அமைச்சரவை விரிவாக்கத்தில் மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த எந்த ஒரு எம்.பி.யும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. இது தென் மாவட்ட காங்கிரஸ் கட்சியினரை வருத்தமடையச் செய்துள்ளது.

 இப்போதுள்ள நிலையில், மதுரைக்கு தெற்கே மத்திய அமைச்சரவைப் பிரதிநிதி என்ற வகையில் மு.க.அழகிரி மட்டுமே உள்ளார். காங்கிரஸ் பிரதிநிதி ஒருவர் கூட இல்லை.

 ""திமுகவின் தென் மண்டலத்தில் உள்ள 10 எம்.பி. தொகுதிகளில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

 4 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி உயிரோட்டமாக இருப்பது தென்கோடி மாவட்டங்களில்தான்.

 அந்த மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாதிருப்பது தொண்டர்களைச் சோர்வடையச் செய்யும் என்பதோடு கட்சியையும் பலவீனப்படுத்தும்'' என்கின்றனர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள்.

 அதுமட்டுமன்றி, காங்கிரûஸச் சேர்ந்தவர்கள், அமைச்சரவைப் பிரதிநிதி என்ற வகையில் திமுக அமைச்சரான அழகிரியைத்தான் அணுக வேண்டும் என்பது சற்றுநெருடலாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ளன.

 தமிழ்நாட்டில் காங்கிரஸ் தயவுடன் ஆட்சி நடத்தி வரும் திமுக, அமைச்சரவையில் எங்களுக்கு இடம் தர மறுத்து வருகிறது.

 இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரதிநிதித்துவமும் இல்லாமல் இருப்பது தேர்தல் நோக்கில் கட்சியைப் பெரிதும் பாதிக்கும். தேர்தல் பணியிலும் தொண்டர்களுக்கு ஆர்வமின்மை ஏற்படும் என்பது அவர்களது கருத்து.

 திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலரான மத்திய அமைச்சர் அழகிரி, தென் மாவட்டங்கள் முழுமையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அவரது கட்சியை வளர்க்க ஏதுவாக எவரது தலையீடும் இல்லாத சூழ்நிலையையும் காங்கிரஸ் கட்சியே ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் அவர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.

 வாய்ப்பு வருமா? இதனிடையே, தென்கோடி மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி.க்களில் ஓரிருவருக்கு அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என அவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

 மத்திய அமைச்சரவையில் பிரதமர் தவிர 81 பேரை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இதுவரையில் 78 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் 3 பேர் சேர்க்கப்பட உள்ளனர். அதில் தென்கோடி மாவட்ட எம்.பி.க்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.

 முந்தைய திருச்செந்தூர் தொகுதியில் 1962-ல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட டி.டி. கிருஷ்ணமாச்சாரி நிதி அமைச்சராக இருந்துள்ளார்.

 அதன் பின்பு, அண்மைக் காலங்களில் 1989-க்கு பிறகு காங்கிரஸ், அதிமுக, பாஜக, திமுக என ஏதேனும் ஒரு கட்சியைச் சேர்ந்த தென் மாவட்ட எம்.பி.க்கள் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இந்த முறை அமைச்சர் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT