உதவித்தொகை கேட்டு பிரதமருக்கு 500 அஞ்சல் அட்டைகள்: மாற்றுத் திறனாளிகள் அமைப்பு அனுப்பியது
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பிரதமருக்கு கோரிக்கை அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் உள்ள ஆர்.எம்.எஸ். தபால் நிலைய தபால் பெட்டியில் 350-க்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள் போடப்பட்டன. 40 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் ஊனமுற்றவர்கள் அனைவருக்கும் நிபந்தனையின்றி மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் அல்லது வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை அஞ்சல் அட்டைகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் பி. தியாகராஜன் தலைமை வகித்தார். செயலர் எஸ். குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுபோல் மாவட்டத்தில் தென்காசி, வீரவநல்லூர், முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை அஞ்சல் அட்டைகள் பிரதமருக்கு அனுப்பப்பட்டதாக தியாகராஜன் தெரிவித்தார்.
"சங்கத்தின் அகில இந்திய முடிவின்படி அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது 60 சதவிகிதத்துக்கு மேல் ஊனமுற்ற நபர்களில் ஒருசிலருக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை மாநில அரசு வழங்குகிறது. மத்திய அரசிடம் உதவி கேட்டு இந்த நூதன போராட்டத்தை நடத்தியிருக்கிறோம்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.