திருநெல்வேலி

325 தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் ஆணை

தினமணி

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் 325 அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

2016-17 நிகழ் கல்வியாண்டுக்கான பள்ளிக் கல்வித் துறையில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இதில் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களில் காலியாகவுள்ள அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் காலையில் சுமார் 300 அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் ஆணை பெற விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 212 அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களின் விருப்பத்துக்கேற்ப மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் ஆணை பெற்றுள்ளனர்.

இதே போல பிற்பகலில் நடைபெற்ற கலந்தாய்வில் 108 அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தாங்கள் தற்போது பணிபுரியும் மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்துக்கு தங்களின் விருப்பத்துக்கேற்ப மாறுதல் ஆணை பெற்றுள்ளனர். பணியிட மாறுதல் கலந்தாய்வில் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 7 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு, 5 பேர் தங்களின் விருப்பத்துக்கேற்ப மாறுதல் ஆணை பெற்றுள்ளனர்.

பொது மாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இணையதளம் மூலம் நடைபெற்றது. மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டன.

மொத்தம் 325 அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவரவர் விருப்பத்துக்கேற்ப பணியிடங்களைத் தேர்வு செய்து பொது மாறுதல் ஆணையைப் பெற்றுள்ளனர்.

இன்று பதவி உயர்வு கலந்தாய்வு: உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பணி மூப்பு முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு மூலம் காலியாக உள்ள 499 அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இப்பணிகள் சரியாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து இணை இயக்குநர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று மேற்பார்வை செய்து வருகின்றனர் என பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் 11 பேருக்கு உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சி, மாநகராட்சி மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

முதன்மை கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் முன்னிலையில், காலியிடங்கள் குறித்த விவரங்கள் கணினியில் வெளியிடப்பட்டன. பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ஸ்ரீதேவி கலந்தாய்வைத் தொடங்கிவைத்தார். முதல்நாள் கலந்தாய்வு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்காக நடைபெற்றது. இதில், உள் மாவட்டத்துக்குள் மாறுதல் கோரி 17, வெளி மாவட்டத்துக்குள் மாறுதல் கோரி 3 பேரும் பங்கேற்றனர். இவர்களில் 8 பேருக்கு உள் மாவட்டத்துக்குள் அவரவர் தேர்வு செய்த பள்ளிகளுக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.

3 பேருக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இரண்டாவது நாளான ஞாயிறுக்கிழமை அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும். ஆக.13ஆம் தேதி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். இதேபோல, ஆக. 20, 21, 22, 23, 24, 27, 29 ஆகிய தேதிகளிலும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு நாளில் கலந்தாய்வு நடைபெறும். செப்டம்பர் 3, 4ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர் மாறுதல், செப்.6ஆம் தேதி இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி சிறப்பு ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT