திருநெல்வேலி

கணக்கில் வந்தாச்சு: கைக்கு வருவது எப்போது? வங்கிகளில் திரண்ட அரசு ஊழியர், ஓய்வூதியர்கள்!

DIN

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், முதியோர் உதவித் தொகை பெறுவோருக்கு நவம்பர் மாதத்துக்கான ஊதிய பட்டுவாடா அவரவர் வங்கிக் கணக்கில் வியாழக்கிழமை வந்துவிட்டது. ஆனால், வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தவிர அலுவலகங்கள், பணிமனைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல, மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் அதன் சார்ந்த அலுவலகங்களில் 15 ஆயிரம் பேர், வங்கிப் பணியாளர்கள் 2,500 பேர், கூட்டுறவு ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிவோர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளோர் என சுமார் 5 லட்சம் பேர் அரசு மூலம் மாத ஊதியம் பெறுகின்றனர்.
ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் வங்கிகள், ஏடிஎம் மையங்கள் முடங்கியுள்ள நிலையில், டிச.1ஆம் தேதி மட்டும் 5 லட்சம் பேருக்கு ஊதியத் தொகை வழங்க முடியாமல் மேலும் திகைத்துப் போயின.
ரூ.3 ஆயிரம் முன் பணம்: அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு முன்பணமாக புதன்கிழமையே ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமே முன்பணம் வழங்கப்பட்டது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில பணிமனைகளில் வழங்கப்படவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை காலை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் வந்தவர்களை பிற்பகல் 12 மணிக்கு வருமாறு அனுப்பினர். திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 12 மணிக்கு அனைவருக்கும் முன்பணம் வழங்கப்பட்டது. இதேபோல, கேடிசி நகர், வண்ணார்பேட்டை, தென்காசி, சங்கரன்கோவில் மற்றும் மூன்று மாவட்டங்களிலும் உள்ள அந்தந்தப் பணிமனைகளில் ஊழியர்களுக்கு ரூ. 3 ஆயிரம் முன்பணமாக வழங்கப்பட்டது. ரூ.2 ஆயிரம் புதிய ரூபாய் நோட்டாகவும், மீதம் ரூ.100 ரூபாய் நோட்டுகளாகவும் வழங்கப்பட்டன. இதுமட்டுமல்லாது மீதத் தொகை முழுவதும் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
ரூ. 4 ஆயிரம் மட்டுமே: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் நவம்பர் மாத ஊதியம் வரவு வைக்கப்பட்டதால் ஏடிஎம் மையங்களிலும், வங்கிக் கிளைகளிலும் அதிகாலையிலேயே கூட்டம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலானோர் ரூ.24 ஆயிரத்துக்கு தொகை எடுக்க அனுமதி கோரினர். ஆனால், அவ்வளவு தொகையை வழங்க முடியாது என கூறிய வங்கிக் கிளைகள், அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் எடுக்க மட்டும் அனுமதியளித்தனர். ஒருசில கிளைகளில் மட்டும் கூடுதல் தொகை வழங்கப்பட்டது. முதியோர் உதவித்தொகை பெறுவோரும் வங்கிக் கிளைகளில் காத்துக் கிடந்து பெரிதும் சிரமத்துக்கு பிறகே பணத்தை பெற்றுச் சென்றனர். பெரும்பாலான கிளைகளில் நண்பகல் 12 மணிக்கு மேல் பணம் இல்லாததால் கூட்டத்தைக் காண முடியவில்லை.
புதிய 500 ரூபாய்: திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை ஒருசில தனியார் வங்கிகளுக்கு மட்டுமே சொற்ப அளவில் வந்திருந்த 500 ரூபாய் புதிய நோட்டுகள், வியாழக்கிழமை தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளுக்கும் அதிகளவில் வந்து சேர்ந்தன. குறிப்பாக, பாரத ஸ்டேட் வங்கிகளிலும், அதன் ஏடிஎம் மையங்களிலும் வியாழக்கிழமை ரூ.500 நோட்டுகள் தாராளமாக விநியோகிக்கப்பட்டன. இருப்பினும் ஒருவர் ரூ.2 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வங்கி ஊழியர்கள் சம்மேளன நிர்வாகி ரெங்கன் கூறியது:
வங்கி ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் ஒன்றாம் தேதி முழுமையாக அவரவர் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்பட்டுவிட்டது. ஆனால், அந்தத் தொகையை முழுமையாக எடுக்க முடியவில்லை. வங்கிக் கிளைகளில் உள்ள இருப்புக்கு தகுந்தபடியே விநியோகம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இப்போது, ரூ.500 நோட்டுகள் வரத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து கூடுதல் தொகையை வழங்குவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் நவம்பர் மாத ஊதியத்தை சிறிது, சிறிதாக மட்டுமே எடுக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி எவ்வளவு தொகைக்கும் மளிகைப் பொருள்கள், ஜவுளி மற்றும் இதரத் தேவைகளை பூர்த்தி செய்யலாம். வீட்டு வாடகை, கடன், பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு வழங்க வேண்டிய தொகையை பெற வங்கிகளில் காத்திருக்க வேண்டியது அவசியமாக உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT