முகப்பு
திருநெல்வேலி

அரசுப் பேருந்துகளில் குடைபிடித்து பயணிக்கும் மக்கள்: போதிய பராமரிப்பில்லை என புகார்

பராமரிப்பில்லாத அரசுப் பேருந்துகளில் மழைநீர் ஒழுகுவதால் பேருந்துக்குள் குடை பிடித்து பயணிக்கும் நிலை உள்ளதாகவும், பயணம் நேரம் அதிகரிப்பதாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

பராமரிப்பில்லாத அரசுப் பேருந்துகளில் மழைநீர் ஒழுகுவதால் பேருந்துக்குள் குடை பிடித்து பயணிக்கும் நிலை உள்ளதாகவும், பயணம் நேரம் அதிகரிப்பதாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் அடங்கிய திருநெல்வேலி கோட்டத்தில் 1,500 க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இவற்றில் சில பேருந்துகள் போதிய உதிரி பாகங்கள் இல்லாமலும், பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக இயக்கப்படுவதாலும்  பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஓட்டை உடைசலுடன் இயக்கப்படும் பேருந்துகள், குறிப்பிட்ட பயண நேரத்திற்குள் நிலையத்தை வந்தடைவதில்லை என்ற புகாரும் உள்ளது.
பாபநாசம்-திருநெல்வேலி வழித்தடத்தில் புதன்கிழமை இயக்கப்பட்ட டி.எஸ்.எஸ். பேருந்து, மிகக் குறைந்த வேகத்தில் சென்றதால் அரை மணி நேரம் தாமதமாக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தடைந்தது. இதனால்  பாதிக்கப்பட்ட பயணிகள், கல்லூரி மாணவர்கள் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கரன்கோவில்-திருநெல்வேலி, அம்பாசமுத்திரம்-பாபநாசம் வழித்தடத்தில் இயக்கப்படும் சில பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் குடை பிடித்து பயணிக்கும் நிலை உள்ளது.
இது தொடர்பாக பயணி ஒருவர் கூறியது: அரசுப் போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை சரியாகப் பராமரிப்பதில்லை. பேருந்துக்குள் மழைநீர்  கொட்டுகிறது. மக்கள் நனைந்துவாறு பயணிக்கின்றனர்.  மக்களுக்கு பேருந்து சேவையை முறையாக அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
திருநெல்வேலி பொதுஜன பொதுநல அமைப்பின் தலைவர் முகம்மது அயூப்  கூறியது:  அரசுப் பேருந்துகள் பழுதடைந்து காணப்படுகின்றன. போக்குவரத்துக் கழகம் வணிகம் நோக்கத்துடன் செயல்படாமல் மக்களுக்கு போக்குவரத்து சேவையை முழுமையாக அளிக்க வேண்டும்.
தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசுப் பேருந்துகளின் கட்டமைப்பை சீரமைத்து தரமான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
சிஐடியூ அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகி எஸ். பெருமாள்  கூறியது: பேருந்துகள் போதிய பராமரிப்பில்லாத சூழலில் இயக்கப்படுகின்றன.
பணிமனைகளில் போதிய தொழில்நுட்ப பணியாளர்கள், தேவையான உதிரி பாகங்கள் இல்லாததால் மழைக் காலங்களில் பேருந்துகள் பராமரிப்பு குறைந்து விடுகிறது. இதனால் வழித்தடங்களில் பேருந்துகள் பழுதடைந்து நிறுத்தப்படுகின்றன.
பல்வேறு காரணங்களால் ஓட்டுநர், நடத்துநர்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால், மக்களுக்கு பேருந்து சேவை அளிப்பதில் குறைபாடுகள் எழுந்துள்ளன என்றார் அவர்.

பேருந்துகளை புதுப்பித்து இயக்க நடவடிக்கை
அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் குமார் கூறியது: பராமரிப்பில்லாத பேருந்துகளை பழுது நீக்கவும்,  இயக்க முடியாத நிலையில் உள்ள பேருந்துகளை புதுப்பித்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக மோசமாக இருப்பதால், மக்களுக்கு பேருந்து சேவை அளிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. குறைந்த வேகத்தில் இயக்கினாலும் பரவாயில்லை, மக்களுக்கு பாதுகாப்பான பேருந்து சேவை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →