பாளை. கல்லூரியில் எஸ்.சி.- எஸ்.டி. இளைஞர்களுக்கு திறன் வளர் பயிற்சி
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில், ஆதிதிராவிடர் மற்றும்
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (எஸ்.சி., எஸ்.டி.) இளையோருக்கு திறன் மேம்பாட்டு இலவசப் பயிற்சி அளிக்கப்படும் என்றார் அக்கல்லூரி முதல்வர் எம். முஹம்மது சாதிக் .
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (தாட்கோ), ஐசிடி, ஏசிடி தொழில்நுட்ப மற்றும் பயிற்சி நிறுவனம், திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வேலைவாய்ப்பு வழிகாட்டி- பயிற்சித் துறை ஆகியவற்றின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளையோருக்காக 25 நாள்கள் சிறுவணிகம் மற்றும் விற்பனை மேலாண்மைத் துறையில் திறன்மேம்பாடு தொடர்பான இலவசப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
இதில், அந்த சார்ந்த நிபுணர்கள் பங்கேற்று இணையதள வடிவமைப்பு, வங்கி மற்றும் காப்பீடு தொடர்பான பயிற்சி அளிப்பர். பங்கேற்போருக்கு இலவச கையேடுகள் வழங்கப்படுவதுடன், பயிற்சியின் நிறைவில் தேர்வு நடத்தப்பட்டு தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படும். 85 சதவீத வருகைப் பதிவுள்ள மாணவர்களுக்கு தினப்படி ரூ.100 வீதம் கணக்கிட்டு வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
இப்பயிற்சி வகுப்பில், 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடித்தவர்கள், இந்தக் கல்வியாண்டில் கலை, அறிவியல், வணிகவியல், வணிக மேலாண்மை பாடங்களில் பட்டப்படிப்பை முடித்த, வேலைவாய்ப்பில்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளையோர் பங்கேற்கலாம்.
சுயவிவரக்குறிப்பு, சாதிச் சான்றிதழ் நகல், ஆதார்அட்டை நகல், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்புச் சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் அவசியம். ஒருங்கிணைப்பாளர் அ. ஜாஹிர் உசேனை மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 9443615236 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ ஜூன் 7க்குள் தொடர்புகொண்டு பெயர்ப் பதிவு செய்ய வேண்டும் என்றார்.