திருநெல்வேலி

சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகுமா குற்றாலம்?

இயற்கை அன்னையின் கொடையான குற்றாலத்தில் விரைவில் சீசன் தொடங்கவுள்ள நிலையில், அடிப்படை வசதிகள், பொழுதுபோக்கு

பா.​ பிரகாஷ்

இயற்கை அன்னையின் கொடையான குற்றாலத்தில் விரைவில் சீசன் தொடங்கவுள்ள நிலையில், அடிப்படை வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்களை நிறைவேற்ற வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுக்கு இரண்டு சீசன் நிலவும். முதல் சீசன்  ஜூன், ஜூலை, ஆகஸ்ட்  மாதங்களிலும், அடுத்ததாக ஐயப்ப சீசனும் இருக்கும். முதல் சீசன்தான் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் அருவிகளில் குளித்து மகிழும் காலம்.
இரண்டாவது சீசனில் ஐயப்ப பக்தர்களின் வருகையே அதிக அளவில் இருக்கும். கடந்த 3 ஆண்டுகளாக குற்றாலத்தில் சீசன் களைகட்டாவிட்டாலும், சுற்றுலா பயணிகளின் வருகை குறையவில்லை. கடந்த ஆண்டில் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடி என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இதற்கேற்ப அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
வாகன நிறுத்துமிடம்: குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் வாகன நிறுத்துமிடம் போதுமானதாக இல்லை. குற்றாலம் பேரருவிக்கு செல்லும் வழி மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக வாகனங்களை நிறுத்தமுடியவில்லை. பழையகுற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வாகன நிறுத்துமிடம் முழுவதும் சேதமடைந்து மேடு,பள்ளமாகக் காணப்படுகிறது.
பூங்காக்கள்: சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்த பிறகு பொழுதுபோக்குவதற்காக குற்றாலம், ஐந்தருவி பகுதியில் ஏராளமான பூங்காக்கள் உள்ளன. இவற்றில், ஐந்தருவியில் வாகன நிறுத்துமிடம் அருகே உள்ள பூங்காவில் விளையாட்டு உபகரணங்களோ, இருக்கைகளோ இல்லை. அந்த பூங்காவிற்கு பெயர்பலகையும் இல்லை.
குற்றாலம் பேரருவிக்கு செல்லும் வழியில் உள்ள பூங்கா பராமரிப்பின்றியும், விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தும் காணப்படுகிறது. குற்றாலம் பேருந்து நிலையம் அருகேயுள்ள விஸ்வநாதராவ் பூங்காவில் ஏராளமான தள்ளுவண்டி கடைகள் இடத்தை ஆக்கிரமித்துள்ளன.
மேலும், இங்குள்ள குளத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தமிழன்னை, திருவள்ளுவர், இளங்கோவடிகள், ஒளவையார், தொல்காப்பியர் சிலைகள் சேதமடைந்தும், அவற்றின் மீது செடிகள் வளர்ந்து பராமரிப்பின்றியும் காணப்படுகின்றன.
பழையகுற்றாலம் அருவிக்கு அருகே குழந்தைகளுக்கான சிறிய நீச்சல்குளம் உள்ளது. இந்த குளம் பராமரிக்கப்படாததுடன், குப்பைகள் கொட்டப்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும், பழையகுற்றால அருவியிலிருந்து தண்ணீர் வழிந்தோடும் ஆற்றுப் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது.
குடிநீர்: குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையொட்டி, பழையகுற்றாலத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. குடிநீர் குழாய்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. இரவில் ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது. மற்றவை சேதமடைந்த நிலையில் உள்ளன.
கழிப்பறைகள்: இங்கு சுற்றுலா பயணிகளின் வருகைக்கேற்ப கழிப்பறைகள் கிடையாது. குற்றாலம் பேரருவிக்கு செல்லும் வழியில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஆர். சரத்குமார் தன்னுடைய சொந்த நிதி ரூ. 7.5 லட்சத்தில் இ-டாய்லெட்  ஏற்படுத்தி கொடுத்ததுடன், அதை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
ஆனால், அந்த டாய்லெட்டை யாரும் பயன்படுத்த முடியாதவாறு பூட்டிவைத்துள்ளனர். ஐந்தருவியில் பழுதடைந்த கழிப்பறைகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. தென்காசி- குற்றாலம் சாலையில் நுழைவுவாயில் அருகே ரூ. 12 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் 4 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
பெண்கள் பாதுகாப்பு: குற்றாலம் பேரருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பிகள் நீண்டகாலமானதால், துருப்பிடித்து சேதமடைந்த நிலையில் உள்ளன. நிகழாண்டு பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இந்த தடுப்புக் கம்பிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளது.
இதே பகுதியில், பெண்கள் உடைமாற்றும் பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, அங்கு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுலா பயணிகள் கோரிக்கை: அம்மா உணவகம் அமைக்க வேண்டும், சீசன் காலங்களில் 24 மணிநேரம் செயல்படும் மருத்துவமனை, மருந்தகங்களை ஏற்படுத்த வேண்டும்.
உணவகங்களில் விலைபட்டியல், உணவுப் பொருட்களின் தரத்தை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், போதிய கழிப்பறைகள், கழிப்பறைகளில் கட்டண வசூல் போன்றவை குறித்து அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான தங்கும்விடுதிகள், சிற்றில்கள், குடில்கள் ஏராளமாக உள்ளன. இவற்றை முறையாகப் பராமரித்து குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு கொடுக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
அரசுக்குப் பரிந்துரை: இங்கு பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ. 5.5 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT