முகப்பு
திருநெல்வேலி

ஆலங்குளம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

ஆலங்குளம் அருகே நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஆலங்குளம் - திருநெல்வேலி சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து

Updated On : 22 மே, 2018 at 4:44 AM
பகிர்:

ஆலங்குளம் அருகே நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஆலங்குளம் - திருநெல்வேலி சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆலங்குளம் அருகேயுள்ள கீழக் கரும்புளியூத்து கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் கடந்த சில மாதங்களாக சாதாரண பேருந்துகள் மற்றும் எஸ்.எப்.எஸ். பேருந்துகள் நிற்காமல் சென்று விடுகின்றனவாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், ஆலங்குளம் - திருநெல்வேலி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அனைத்து பேருந்துகளும் கீழக் கரும்புளியூத்தில் நின்று செல்ல வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து ஆலங்குளம் வட்டாட்சியர் பிரபாகரன் அருண்செல்வம், காவல் ஆய்வாளர் அய்யப்பன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தென்காசி பணிமனை மேலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுதொடர்பாக வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.