அம்பேத்கர் படம் அவமதிப்பு: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
திருநெல்வேலியை அடுத்த சேந்திமங்கலம் பகுதியில் அம்பேத்கர், வீரன் சுந்தரலிங்கம் உள்ளிட்டோரின் உருவப் படங்களை அவமதித்தவர்கள்
திருநெல்வேலியை அடுத்த சேந்திமங்கலம் பகுதியில் அம்பேத்கர், வீரன் சுந்தரலிங்கம் உள்ளிட்டோரின் உருவப் படங்களை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை பல்வேறு அமைப்பினர் முற்றுகையிட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது திருநெல்வேலி வட்டம், சேந்திமங்கலம் கிராம மக்கள் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பினர், புதிய தமிழகம், ராஜ்ய மள்ளர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் ஊரில் அம்பேத்கர், வீரன் சுந்தரலிங்கம், பசுபதி பாண்டியன் ஆகியோரின் படம் வரைந்த மணிமண்டபம் உள்ளது. மணிமண்டபத்தில் உள்ள படங்களை சிலர் அவமதிப்பு செய்துள்ளனர். இதேபோல், கடந்த சில நாள்களுக்கு முன்பு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்தை சிலர் அவமதிப்பு செய்துள்ளனர். இதனால், இரு சமூகத்துக்கு இடையே உள்ள நல்லுறவை சீர்குலைத்து வருகின்றனர். படங்களை அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி, அளிக்கப்பட்ட மனுவில், மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் 44 முஸ்லிம் இளைஞர்கள் 14 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு கட்டங்களாக தமிழக சிறைகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யாமல் பாரபட்சம் காட்டப்படுகிறது. அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு மற்றும் உள்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்னர். முன்னதாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் அளித்த மனுவில், குடும்பர், பண்ணாடி, காலடி, கடையன், தேவேந்திரகுலத்தான், வாதியான், பள்ளர் ஆகிய 7 உட்பிரிவுகள் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் உட்பிரிவுகளாகும். அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து, அரசாணை வெளியிட வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.