திருநெல்வேலி

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்: உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் அதிரடி

DIN

சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகளை அவிழ்த்து விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
 மாநகராட்சி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆணையர் (பொ) வி. நாராயணன் நாயர் தலைமையில் நகர போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
அதில் ஆணையர் வி.நாராயணன் நாயர் பேசியதாவது: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் கால்நடை வளர்ப்போர் அவற்றை முறையாக வீடுகளில் கட்டி வைத்து வளர்ப்பதில்லை. 
காலை வேளைகளில் கால்நடைகளில் பால் கறந்த பிறகு அவற்றை வெளியில் மேய்ச்சலுக்கு விடும் உரிமையாளர்கள் பின்னர் அதைப்பற்றி கண்டுகொள்வதே கிடையாது.  இதனால் விதிமுறைகளை மீறி கால்நடை வளர்க்கும் உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை சாலைகளில், பேருந்து நிலையங்களில் சுற்றித் திரிய விடுகிறார்கள். 
இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் சூழல் உருவாகியுள்ளது.  அதைத் தடுக்கும் பொருட்டு திருநெல்வேலி மாநகராட்சியின் சார்பில் கடந்த காலங்களில் சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கப்பட்டது.
 விதிமுறைகளை பின்பற்றாத உரிமையாளர்களின் கால்நடைகளை கோசாலைகளில் ஒப்படைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கால்நடை வளர்ப்பவர்கள் தற்போதும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.  இது தொடர்பாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள், தன்னார்வலர்களிடமிருந்து தொடர் புகார்கள் வந்தன.
எனவே போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து தொடர் நடவடிக்கை மற்றும் நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இனி வரும் காலங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சட்டத்தின் கீழ் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  மாநகராட்சி அலுவலர்களைக் கொண்டு அதற்கான கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே போக்குவரத்து காவல்துறை தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார். 
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர நல அலுவலர் டி.என்.சதீஷ்குமார், மக்கள் தொடர்பு துணை இயக்குநர் இரா. அண்ணா,  நகர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்கள் செந்தாமரைக் கண்ணன்,  உதவி ஆய்வாளர்கள் பாண்டி, துர்க்கைசாமி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அரசகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT