முகப்பு
திருநெல்வேலி

சமூக அக்கறையுடன் மக்கள் நடந்துகொள்ள வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு

சுற்றுச்சூழல் மற்றும் சமூக அக்கறையுடன் மக்கள் நடந்துகொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் கேட்டுக்கொண்டார்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:05 AM
பகிர்:

சுற்றுச்சூழல் மற்றும் சமூக அக்கறையுடன் மக்கள் நடந்துகொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் கேட்டுக்கொண்டார்.
தென்காசி கூடுதல் நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் கள முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:
தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட  மக்கள் அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் பலன்களை எவ்வாறு பெறுவது என்பது தெரியாமல் உள்ளனர். அவர்களை இங்கு கொண்டு வந்து நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களையும்  நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அது மட்டுமின்றி பலன்களை பெறமுடியாத நிலையில் உள்ள மக்கள் அனைவரையும் அழைத்து வந்து இத்தகைய திட்டங்கள் அவர்களை சென்று சேரும் வகையில் பணிபுரிய வேண்டியது ஒவ்வொரு குடிமகனின்கடமையாகும். மத்திய, மாநில அரசுகளும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மக்கள் அனைவரும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும். சுற்றியுள்ள மக்களோடு அன்போடும், உதவும் எண்ணத்தோடும்  செயல்பட வேண்டும் என்றார் அவர்.
மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சட்டப்பணிகள் குழு மாநில செயலரும் மாவட்ட நீதிபதியுமான ஏ.நசீர்அகமது, அரசு வழக்குரைஞர் ஏ.கார்த்திக்குமார், பார்அசோசியேஷன் செயலர் புகழேந்தி ஆகியோரும் பேசினர்.
முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை, ஆதரவற்ற விதவைகள் உதவித் தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமக்கிரியை உதவித் தொகை, திருமண உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. முகாமில் அரசின்  27 துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி சந்திரா, மாவட்ட வருவாய்அலுவலர் முத்துராமலிங்கம், நீதிபதி மருதுபாண்டியன், கூடுதல் நீதிபதி பத்மநாபன், நீதித்துறை நடுவர் திரிவேணி, அட்வகேட் அசோசியேஷன் சங்க செயலர் மாரியப்பன், அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் ராமசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதன்மை மாவட்ட நீதிபதி கே.ராஜசேகர் வரவேற்றார். தென்காசி முதன்மை சார்பு நீதிபதி ஜி.நாகராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.