நெல்லையில் காவலர்களுக்கான உடற்தகுதி சோதனை: 794 பேர் பங்கேற்பு
இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி சோதனை பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி சோதனை பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடற்திறன் தேர்வு 5ஆம் தேதி தொடங்கி 3 தினங்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல்துறையில் காலியாக இருக்கும் 2ஆம் நிலை காவலர், சிறைத் துறை காவலர், தீயணைப்புப் படை வீரர்களுக்கான தேர்வு நிகழாண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடற்தகுதி சோதனை நடத்தப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ள 805 பெண்கள் உள்பட 2808 பேருக்கு உடற்தகுதி சோதனை நடத்துவதற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதன்படி, முதல்கட்ட சோதனை பாளையங்கோட்டையில் ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் பாஸ்கர், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே. அருண்சக்திகுமார் ஆகியோர் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெற்றது. இதில், உயரம், மார்பளவு, 1500 மீட்டர் ஓட்டம் ஆகிய சோதனைகள் நடத்தப்பட்டன. 1000 பேருக்கு அழைப்பாணை அனுப்பியதில் 794 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சோதனைகளை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் எஞ்சியுள்ளவர்களுக்கு உடற்தகுதி சோதனை நடைபெறுகிறது. இச்சோதனையில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இம்மாதம் 5, 6 மற்றும் 7ஆம் தேதிகளில் கயிறு ஏறுதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய உடற்திறன் தேர்வு நடத்தப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.