"மக்களவைத் தேர்தல் அச்சத்தால் சலுகைகள் அளிப்பு'
மக்களவைத் தேர்தல் குறித்த அச்சத்தால்தான் மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை அளித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் குறித்த அச்சத்தால்தான் மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை அளித்துள்ளது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
தமிழகத்தில் கருத்து, பேச்சு, கலை சுதந்திரம் இல்லாத சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்தை சுமூக தீர்வுக்கு கொண்டு வர அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
கொடநாடு சம்பவத்தில் தங்களது கட்சித் தலைவர் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சிக்கே துரித நடவடிக்கை எடுக்காத அதிமுக மீது சந்தேகம் வலுக்கிறது. இவ்விஷயத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பதவி விலக வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காகவும், தேர்தல் அச்சத்தாலும்தான் மத்திய அரசு பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு, சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் அளித்துள்ளது. அதேநேரத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்திற்கு மத்திய அரசு எவ்வித திட்டங்களையும் செய்யவில்லை. மதச்சார்பற்ற அரசு உருவாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். விவசாயிகள், தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்து பணியாற்றும் என்றார் அவர்.