திருநெல்வேலி

வள்ளியூர் ரயில்வே கிராஸிங் சுரங்கப்பாதையில் மண்சரிவு: தற்காலிக பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதி

DIN


வள்ளியூரிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கிராஸிங் சுரங்கப்பாதையில் வெள்ளிக்கிழமை இரவு மண்சரிவு ஏற்பட்டதால், அதனருகே இருந்த தற்காலிக பாதையில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் ரயில்வே கிராஸிங் உள்ளது. இதில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ. 12 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இந்தப் பாதைக்காக 25 அடி பள்ளம் தோண்டப்பட்டு, கான்கிரீட் சாலை மற்றும் பக்கச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, இந்த வழியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டதால், கனரக வாகனங்கள் அனைத்தும் தெற்குவள்ளியூர் வழியாக 7 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச்செல்கின்றன. சுரங்கப்பாதைக்கு அருகே இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, ஆம்புலன்ஸ் போன்றவை செல்லும் வகையில், தற்காலிக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாதை கரடுமுரடாகவும், ஆபத்தானதாகவும் உள்ளது. என்றபோதும் இதையே மக்கள் பயன்படுத்திவந்தனர். இந்நிலையில், தற்காலிக பாதையில் வெள்ளிக்கிழமை இரவு மண்சரிவு ஏற்பட்டு, கான்கிரீட் சாலை போடும் பகுதியில் விழுந்தது. இதனால், கான்கிரீட் கம்பிகள் சேதமடைந்தன.
இதையடுத்து, தற்காலிக பாதையிலும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் ரயில்நிலையம் அருகேயுள்ள தண்டவாளம் வழியாக ஆபத்தான நிலையில் சென்று வருகின்றனர். ஆபத்தான பயணம் குறித்தோ, மாற்றுப்பாதை அமைப்பது குறித்தோ அதிகாரிகள் அக்கறைகாட்டவில்லை என இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் எஸ். சேதுராமலிங்கம் கூறியது:
ரயில்வே கிராஸிங் சுரங்கப்பாதை பணி மிகவும் மெத்தனமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் குறித்தோ, அவை எப்போது முடிக்கப்படும் என்பது குறித்தோ எந்த அறிவிப்பு பலகையும் இங்கு வைக்கப்படவில்லை. விபத்து நடந்தபிறகு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதைவிட முன்னதாகவே நடவடிக்கை எடுக்கவேண்டும். விரைவாக பணியை முடிக்க அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
வள்ளியூர் வியாபாரிகள் சங்கச் செயலாளர் எஸ். ராஜ்குமார் கூறியது:
ஒரு திட்டம் தொடங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வருவதற்கு இத்தனை காலதாமதம் ஏற்படக் கூடாது. ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த சுரங்கப்பாதை பணிகளால் ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாற்றுப்பாதையில் 8 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லவேண்டியுள்ளது. வள்ளியூர் ரயில் நிலையத்திற்கு தெற்குப் பகுதியில் சர்வே செய்யப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT