முகப்பு
திருநெல்வேலி

வேட்டைக்காக வைத்த வெடிப் பழத்தைத் தின்ற ஆடு தலை சிதறி பலி

அம்பாசமுத்திரம், பத்தமடை அருகே குளத்தில் மேய்ந்த ஆடு வேட்டைக்காக வெடி வைத்துப் போடப்பட்டப் பழத்தைத் தின்றதில் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
வெடி வெடித்து தலை சிதறி பலியான ஆடு
பகிர்:

அம்பாசமுத்திரம், பத்தமடை அருகே குளத்தில் மேய்ந்த ஆடு வேட்டைக்காக வெடி வைத்துப் போடப்பட்டப் பழத்தைத் தின்றதில் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தது.

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் தனியார் பள்ளி அருகே உள்ள இடைஞ்சான் குளத்தில் பத்தமடையைச் சேர்ந்த மாரியப்பன், சனிக்கிழமை தான் வளர்த்து வந்த ஆடுகளை மேய்க்கக் கொண்டு சென்றுள்ளார். மதியம் குளத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு அங்கே கிடந்த பழத்தைக் கடித்ததும் அந்தப்பழம் திடீரென வெடித்தது. 

இதில் ஆடு தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்துத் தகவலறிந்த பத்தமடை காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறும்போது, மேய்ச்சலுக்கு வரும் ஆயிரக்கணக்கான ஆடுகள், மாடுகள் மற்றும் அருகிலுள்ள வனத்துறை பகுதியான கொழுந்துமாமலையிலிருந்து வரும் மிளா, காட்டுப் பன்றி உள்ளிட்ட மிருகங்கள் அப்பகுதி குளத்தில் தான் தண்ணீர் குடித்துச் செல்லும். சில காலமாக இது போன்று வெடிவைத்த பழங்களை வைத்து அந்தப் பகுதியில் இரை தேட வரும் மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளை சிலர் வேட்டையாடி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இன்று வீட்டு வளர்ப்பு விலங்கான ஆடு உயிரிழந்துள்ளது.” என்றனர்.

எனவே, தொடர்ந்து இதுபோன்று நடக்காமல் இருக்க வனத்துறையும், காவல்துறையும் உரிய விசாரணை செய்து தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.