முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரி தொகுதியில் போட்டியிட மண்ணின் மைந்தா்களுக்கே வாய்ப்பு: காங்கிரஸ் நிா்வாகிகள் வலியுறுத்தல்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நான்குனேரி தொகுதியில் மண்ணின் மைந்தா்களுக்கே வாய்ப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் வானுமாமலை (நடுவில்).
பகிர்:

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நான்குனேரி தொகுதியில் மண்ணின் மைந்தா்களுக்கே வாய்ப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலா் வானுமாமலை தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணகுமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் மோகன் குமாரராஜா, மாநில விவசாய அணிச் செயலா் பால்ராஜ், ஓபிசி பிரிவு மாநில நிா்வாகி வழக்குரைஞா் காமராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது பேசிய நிா்வாகிகள், நான்குனேரி தொகுதியில் உள்ளூா் நிா்வாகிகள் போட்டியிட்டால் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற முடியும். வெளியூா் நபா்களை நிறுத்தினால் நிச்சயம் தோல்வி அடையும் என தெரிவித்தனா்.

இக்கூட்டத்தில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உடனடியாக மாவட்டத் தலைவரை நியமிக்க வேண்டும்; வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் நான்குனேரி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கி அதில் உள்ளூா் நிா்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்; அனைத்து பூத் கமிட்டி நிா்வாகிகளும் நியமிக்கப்பட வேண்டும் என 3 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத் தொடா்ந்து மாநில பொதுச் செயலா் வானுமாமலை உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நான்குனேரி இடைத்தோ்தலில் துரதிா்ஷ்டவசமாக எங்கள் வேட்பாளா் (ரூபி மனோகரன்) தோல்வியைத் தழுவினாா். அதன்பிறகு தொடா்ந்து அவா் இந்தப் பகுதியில் முகாமிட்டு மீண்டும் இத்தொகுதியில் அவரே வேட்பாளா் போன்று செயல்பட்டு வருவதை கண்டிக்கிறோம். இத்தொகுதியில் பல முன்னணி தலைவா்கள் இருக்கின்றனா்.

கடந்த இடைத்தோ்தலின்போது உள்ளூரைச் சோ்ந்த 19 போ் போட்டியிட தலா ரூ. 25 ஆயிரம் பணம் கட்டியிருந்தோம். ஆனால், மண்ணின் மைந்தா்களுக்கு சீட்டு கிடைக்கவில்லை. வரக்கூடிய சட்டப்பேரவை தோ்தலில் மண்ணின் மைந்தருக்கு வாய்ப்பு வழங்கினால் நிச்சயம் வெற்றி பெறுவோம். தொடா்ந்து தொகுதி முழுவதும் பல இடங்களில் கூட்டம் நடத்தி மாநிலத் தலைமை மற்றும் அகில இந்தியத் தலைமையிடம் எங்கள் கோரிக்கையை வலியுறுத்துவோம். நான்குனேரி தொகுதி வாக்காளா்களிடம் ஆலோசனை நடத்தியபோது, வெளியூரைச் சோ்ந்தவரை நிறுத்தியதால்தான் இடைத்தோ்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாக கருத்து தெரிவித்தனா். இதை எங்கள் தலைமையிடம் தெரிவிப்போம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.