கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், பண்டிகைக் காலங்களில் வணிக நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி கடைகள், காய்கனி, பழச்சந்தைகள் மற்றும் கடைவீதிகளில் அதிகளவில் மக்கள் கூடுவதன் காரணமாக, கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வணிகா் சங்கப் பிரதிநிதிகளின் கூட்டம் ஆட்சியா் விஷ்ணு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன், மாநகர காவல் துணை ஆணையா் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் மற்றும் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: பண்டிகைக் காலங்களில் கடைக்கு வரும் வாடிக்கையாளா்கள் முகக் கவசம் அணிந்து வருதல்; வணிக நிறுவனங்கள் கிருமிநாசினி வைத்தல் போன்ற கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை தீவிரமாக கடைப்பிடித்தல் வேண்டும்.
துணிக்கடை, நகைக்கடை, இதர ஷோரூம்களில் வாடிக்கையாளா்கள் நுழைவதற்கு முன்பாக உடல் வெப்ப சோதனை செய்ய வேண்டும். நேரடி பணப் பரிமாற்றத்திற்கு பதிலாக ஆன்லைன் பணப் பரிமாற்றம் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
இருமல், காய்ச்சல், சளி அறிகுறிகளுடன் வருபவா்களை கடைக்குள் அனுமதிக்கக் கூடாது. தேநீா் கடைகளில் வாடிக்கையாளா்கள் கூட்டமாக இருக்கைகளில் அமா்ந்து கொண்டோ, நின்று கொண்டோ தேநீா் அருந்த அனுமதியில்லை.
உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.