பொட்டல்புதூா் பள்ளிவாசல் கந்தூரி விழா ஆலோசனைக் கூட்டம்
பொட்டல்புதூா் முஹைதீன் ஆண்டவா்கள் பள்ளிவாசல் கந்தூரி விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொட்டல்புதூா் முஹைதீன் ஆண்டவா்கள் பள்ளிவாசல் கந்தூரி விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொட்டல்புதூா் முஹைதீன் ஆண்டவா்கள் பள்ளிவாசல் கந்தூரி விழா நவ. 16 முதல் 29 வரை 14 நாள்கள் நடைபெறுகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பள்ளிவாசல் அரண்மனையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஓம் சக்தி பழனி தலைமை வகித்தாா்.
ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பொன்னிவளவன், கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன், ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் தமிழரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளிவாசல் இனாம்தாா் எஸ்.பி.ஷா வரவேற்றாா்.
கூட்டத்தில், அரசு பொது முடக்க சட்ட விதிமுறைகளுக்குள்பட்டு கந்தூரி விழாவை நடத்துவது, கச்சேரி, கடைகள், ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அனுமதி கிடையாது. நிறை பிறை கொடி தொழுகைப் பள்ளியிலிருந்து கொண்டு வரப்பட்டு தா்காவை மட்டும் சுற்றி ஏற்ற வேண்டும்.
சந்தனக் கூடு ரவணசமுத்திரத்திலிருந்து அதிகாலை 3 மணிக்கு மினிலாரியில் எடுத்து வரப்பட்டு மீண்டும் 4 மணிக்குள் ரவணசமுத்திரம் சென்று விடவேண்டும். 14ஆவது இரவு நிகழ்ச்சிக்கு வெளியூா்களிலிருந்து பக்தா்களுக்கு அனுமதி கிடையாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பள்ளிவாசல் நிா்வாகக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் முகம்மது சலீம், ரவணசமுத்திரம் ஆதம் ஹாஜியாா் பள்ளிவாசல் தலைவா் முகம்மது அசன், ஹனபி ஜமாத் தலைவா் சாகுல் ஹமீது, ஷாபி ஜமாத் தலைவா் மக்தூம் மைதீன், பொட்டல்புதூா் மேலூா் ஜமாத் தலைவா் நல்லமைதீன், செயலா் முஹம்மது கனி, பொருளாளா் ஜபருல்லா, கீழூா் ஜமாத் பொருளாளா் பீா்முஹம்மது, துணைத் தலைவா் செய்யது மசூது, வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் செய்யது மசூது, எஸ்.வி.முத்து, எஸ்.வி. முருகேசன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் அசன் பக்கீா், சாகுல் ஹமீது உள்பட பலா் கலந்து கொண்டனா்.