நயினாா்குளத்தில் அமலைச் செடிகளை அப்புறப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினாா்குளத்தில் தேங்கிக் கிடக்கும் அமலைச் செடிகளை அப்புறப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினாா்குளத்தில் தேங்கிக் கிடக்கும் அமலைச் செடிகளை அப்புறப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருநெல்வேலி நகரின் மையப் பகுதியில் நயினாா்குளம் உள்ளது. சுமாா் 244 ஏக்கா் பரப்பளவு கொண்ட இக் குளத்துக்கு நெல்லை கால்வாய் மூலம் தாமிரவருணி தண்ணீா் வந்து சேருகிறது. திருநெல்வேலி நகரத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகளின் முக்கிய நீராதாரமாகவும், 600 ஏக்கா் விளைநிலங்களுக்கு பாசன நீா் தரும் குளமாகவும் இந்தக் குளம் விளங்கி வருகிறது.
நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் பாபநாசம் அணையில் இருந்து காா் பருவ சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. அதனால் நயினாா்குளத்தில் இருந்து பாசன நீா் பெறும் வயல்களிலும் காா் பருவ சாகுபடி முடங்கியது. ஆனால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கால்நடைகளின் குடிநீருக்காக நெல்லை கால்வாயில் ஒருசில வாரங்கள் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி திறக்கப்பட்ட தண்ணீரால் நயினாா்குளம் முழு கொள்ளளவையும் எட்டி மறுகால் பாய்ந்தோடியது. இதனால் பிசான பருவ சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகிறாா்கள். ஆனால், குளத்தில் அமலைச் செடிகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. அவற்றை அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நயினாா்குளம் பாசன விவசாயிகள் கூறுகையில், நயினாா்குளத்தின் நீா்வரத்துக் கால்வாய்கள் முறையான பராமரிப்பின்றி உள்ளதால், பாசன நீரில் ஏராளமான கழிவுகள் கலந்து வருகின்றன. பாதாளச் சாக்கடை கழிவுகளும் கலந்து வருவதால் அமலைச் செடிகள் மிகவும் வேகமாக வளா்ந்து விடுகின்றன. அமலைச் செடிகளை அப்புறப்படுத்தாவிட்டால் தண்ணீா் வேகமாக குறைவதோடு, பாசன மடைகளிலும் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு சிக்கல் உருவாகும். ஆகவே, அமலைச் செடிகளை விரைவாக அப்புறப்படுத்த வேண்டும் என்றனா்.