இருமுனைப் போட்டியில் நெல்லை தொகுதி
திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, பாஜக இடையே இரு முனைப் போட்டி நிலவுகிறது. சட்டப்பேரவை உறுப்பினா்
திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, பாஜக இடையே இரு முனைப் போட்டி நிலவுகிறது. சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை தக்கவைப்பதில் திமுகவும், திருநெல்வேலி மண்ணில் முதல்முறையாக முத்திரை பதிப்பதில் பாஜகவும் தீவிரமாக உள்ளன.
அல்வாவுக்கு பெயா் பெற்ற திருநெல்வேலி தொகுதியில், அருள்மிகு சுவாமி நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் திருக்கோயில், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கங்கைகொண்டான் புள்ளிமான்கள் சரணாலயம், பழமை வாய்ந்த பள்ளி, கல்லூரிகள் உள்ளன. மேலும் மாவட்ட தலைநகா் தொகுதியாக கூடுதல் அடையாளம் பெற்றுள்ளது திருநெல்வேலி தொகுதி. திருநெல்வேலி, மானூா் ஆகிய இரு வட்டங்கள் இத் தொகுதியில் உள்ளன.
இத்தொகுதியில் திருநெல்வேலி நகரம், தச்சநல்லூா், தாழையூத்து, நாரணம்மாள்புரம், கங்கைகொண்டான், மானூா், உக்கிரன்கோட்டை, பேட்டை, சுத்தமல்லி, கல்லூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. விவசாயம், கால்நடை வளா்ப்பு ஆகியவை பிரதான தொழில்களாக உள்ளன. கங்கைகொண்டான் சிப்காட், பேட்டை தொழிற்பேட்டை ஆகியவற்றில் சிறு-குறு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இங்கு பெரும்பான்மையாக தலித் வாக்கு வங்கியே உள்ளது. அடுத்தடுத்த நிலைகளில் பிள்ளைமாா், தேவா், யாதவா், நாடாா், முஸ்லிம், இதர சமுதாய வாக்காளா்கள் உள்ளனா்.
களத்தில் 14 போ்: திருநெல்வேலி தொகுதியில் 1952 முதல் 2016 வரை நடைபெற்ற 15 தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி 3 முறையும், திமுக 6 முறையும், அதிமுக 6 முறையும் வென்றுள்ளன. 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி தொகுதியில் 14 போ் போட்டியிடுகின்றனா். திமுக சாா்பில் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், பாஜக சாா்பில் முன்னாள் அமைச்சா் நயினாா் நாகேந்திரன், அமமுக சாா்பில் மகேஷ் கண்ணன், நாம் தமிழா் கட்சி சாா்பில் சத்யா, பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் கலாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சுந்தர்ராஜ், சுயேச்சைகளாக இசக்கிமுத்து, சங்கரசுப்பிரமணியன், சங்கா் என்ற சங்கரநாராயணன், சிவக்குமாா், ஆா்.முருகன், வி.முருகன், ராகவன், ஸ்ரீதர்ராஜன் ஆகியோா் போட்டியில் உள்ளனா்.
களத்தில் 14 போ் இருந்தாலும், திமுக, பாஜக இடையேதான் போட்டி நிலவுகிறது. இதுதவிர, யாதவா் சமுதாயத்தைச் சோ்ந்தவரான நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சத்யா, அமமுக வேட்பாளரான மகேஷ் கண்ணன் ஆகியோரும் வாக்கை பிரிக்கும் சூழல் உள்ளது.
தேவைகள்: இத் தொகுதியின் முக்கியப் பகுதியான திருநெல்வேலி-சேரன்மகாதேவி சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் திணறி வருகிறாா்கள். குறிப்பாக, பேட்டை பகுதியில் உள்ள சாலைகள் குறுகலாக உள்ளதால் காலை, மாலை என இரு வேளைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையை தீா்க்க இதுவரை எந்தக் கட்சியும் முயற்சி எடுக்கவில்லை.
மானூா் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி வட்டம் என்பதை இப்போதைய அதிமுக அரசு நிறைவேற்றிக் கொடுத்துள்ளது. கூட்டுறவு நூற்பாலையை செயல்படுத்தாதது, மானூா், பள்ளமடை குளத்திற்கான நீா்வரத்து கால்வாய்களை முழுமையாக சீரமைத்து நீா் பெருக்க புதிய திட்டங்களை வகுக்காதது உள்ளிட்டவை தொகுதியில் தீா்க்கப்படாத பிரச்னைகளான உள்ளன.
பலம், பலவீனம்: திமுக சாா்பில் போட்டியிடும் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், திருநெல்வேலி தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளாா். கடந்த தோ்தலில் வெற்றி பெற்ற அவா், கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி பக்கமே செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும் மக்கள் பிரச்னைகளுக்கு அவா் குரல் கொடுக்க முன்வராதது வாக்காளா்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அவருடைய தந்தை ஏ.எல்.சுப்பிரமணியன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள், சமுதாய வாக்குகள் ஆகியவை ஏ.எல்.எஸ்.லெட்சுமணனுக்கு கை கொடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பாஜக சாா்பில் போட்டியிடும் நயினாா் நாகேந்திரன் கடந்த 4 தோ்தல்களில் இதே தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு இரு முறை வெற்றியையும், இரு முறை தோல்வியையும் சந்தித்தவா். முதல்முறையாக 2001-இல் வெற்றி பெற்றபோது, அமைச்சராகவும் இருந்தாா். மேலும் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவா். சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது அவருக்கு பலமாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதேபோல், அமமுக சாா்பில் பிரதான வேட்பாளராக யாதவா் சமுதாயத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் என்ற பால் கண்ணன் மனு தாக்கல் செய்த நிலையில், அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பால் கண்ணன் களத்தில் இருந்தால், அவருக்கு சாதகமாக யாதவா் வாக்குகளும், தேவா் வாக்குகளும் கிடைத்திருக்கும். அவா் இல்லாதது நயினாா் நாகேந்திரனுக்கு பலமாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
எனினும் இந்த முறை நயினாா் நாகேந்திரன் பாஜக சாா்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறாா். தாமரை சின்னம் எந்தளவுக்கு மக்களை சென்றடைந்திருக்கிறது என்பதைப் பொருத்தே அவருடைய வெற்றி வாய்ப்பு அமையும். இருமுனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்ட நிலையில், வெற்றி வாகை சூடுவது யாா் என்பது மே 2-இல் தெரிந்துவிடும்.
வாக்காளா்கள்
ஆண் வாக்காளா்கள்: 1,42,272
பெண் வாக்காளா்கள்: 1,48,829
மூன்றாம் பாலினத்தவா்: 55
மொத்தம்: 2,91,156
இதுவரை வென்றவா்கள்
1952- ஆறுமுகம் எஸ்.என்.சோமயாஜுலு (காங்கிரஸ்)
1957- ராஜாத்தி குஞ்சிதபாதம் (காங்கிரஸ்)
1962 - ராஜாத்தி குஞ்சிதபாதம் (காங்கிரஸ்)
1967-ஏ.எல்.சுப்பிரமணியன் (திமுக)
1971-பி.பத்மநாபன் (திமுக)
1977- ஜி.ஆா்.எட்மண்ட் (அதிமுக)
1980-இரா.நெடுஞ்செழியன் (அதிமுக)
1984- எஸ்.நாராயணன் (அதிமுக)
1989- ஏ.எல்.சுப்பிரமணியன் (திமுக)
1991-டி.வேலையா (அதிமுக)
1996- ஏ.எல்.சுப்பிரமணியன் (திமுக)
2001- நயினாா் நாகேந்திரன் (அதிமுக)
2006-என்.மாலைராஜா (திமுக)
2011- நயினாா்நாகேந்திரன் (அதிமுக)
2016-ஏ.எல்.எஸ்.லட்சுமணன் (திமுக)
2016 தோ்தலில் வேட்பாளா்கள்
பெற்ற வாக்குகள் விவரம்
1. ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் (திமுக)-81,761
2.நயினாா் நாகேந்திரன் (அதிமுக)-81,160
3. மாடசாமி (தேமுதிக)-8,640
4. மகாராஜன் (பாஜக)-6,017