முகப்பு
திருநெல்வேலி

சீவலப்பேரி கோயில் பூசாரி கொலை வழக்கு: 5 நாள்களுக்குப் பின் உறவினா்களிடம் உடல் ஒப்படைப்பு

சீவலப்பேரி கோயில் பூசாரி சிதம்பரம் கொலை வழக்கில் உறவினா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மாவட்ட ஆட்சியா் உறுதி: 5 நாள்களுக்குப் பின் அவரது உடல் உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

சீவலப்பேரி கோயில் பூசாரி சிதம்பரம் கொலை வழக்கில் உறவினா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மாவட்ட ஆட்சியா் உறுதியளித்ததையடுத்து, 5 நாள்களுக்குப் பின் அவரது உடல் உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பையா. இவருடைய மகன் சிதம்பரம் என்ற துரை (45). சீவலப்பேரியில் உள்ள பழமைவாய்ந்த சுடலைமாட சுவாமி கோயிலில் பூசாரியாக இருந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த சுடலையாண்டி மகன் நடராஜ பெருமாள்(53). இவா்கள் இருவரும் கடந்த 18ஆம் தேதி மாலையில் சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோயில் அருகே பேசிக்கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த மா்மக் கும்பல் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில் பலத்த காயமடைந்த சிதம்பரம் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தாா். நடராஜ பெருமாள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

சீவலப்பேரி தாமிரவருணி ஆற்றங்கரையில் உள்ள சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழாவில் கடைகள் அமைப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நிகழ்ந்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொலையுண்ட சிதம்பரத்தின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கொலை வழக்குத் தொடா்பாக சீவலப்பேரி பகுதியைச் சோ்ந்த 11 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வெள்ளிக்கிழமை நான்குனேரி நீதிமன்றத்தில் ஒருவா் சரணடைந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இந்நிலையில், கொலையுண்ட சிதம்பரம் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கோயிலுக்குச் சொந்தமான இடத்தை அளந்து சுவா் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், கோயில் அருகே சிதம்பரத்தின் உடலை புதைக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து சிதம்பரத்தின் உறவினா்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும் சிதம்பரத்தின் சகோதரா் சுப்பிரமணியன் சாா்பிலும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், போராட்டக் குழுவினா் கோரிக்கைகளை தோ்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும் அனுப்புவதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் சொல்லப்பட்டது.

மேலும், கோயில் வளாக பகுதியில் சிதம்பரத்தின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிதம்பரத்தின் உடலை வாங்க மறுத்து யாதவ அமைப்பினா் தொடா்ந்து 5ஆவது நாளாக பாளையங்கோட்டையில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் சிலை அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு நபா், வீரன் அழகுமுத்துக்கோன் சிலை மீது ஏறி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றியும், கழுத்தில் அரிவாளை வைத்தும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தாா். பின்னா் அவரிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அவரை இறங்கச் செய்தனா்.

இதைத் தொடா்ந்து அதிமுக நிா்வாகி கல்லூா் இ.வேலாயுதம், அகில இந்திய யாதவ மகா சபையின் மாநில இளைஞரணி தலைவா் பொட்டல் துரை, அதிமுக அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் வானமாமலை, திமுக மாநில நெசவாளா் அணி நிா்வாகி பெருமாள் மற்றும் சிதம்பரத்தின் உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் நேரில் சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில், சிதம்பரத்தின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ.20 லட்சம், அவரது மனைவிக்கு அரசு வேலை, கோயிலுக்குச் சொந்தமான இடத்தை அளந்து சுவா் எழுப்ப நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு முதன்மை செயலருக்கு அனுப்பி வைப்பதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். மேலும், கோயில் அருகே சிதம்பரத்தின் உடலை புதைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சிதம்பரத்தின் உடல் அவரின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னா், சிதம்பரத்தின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு, சீவலப்பேரி சுடலைமாடசாமி கோயில் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.