அரசின் தலைவராக 8,931 நாள்கள்: பிரதமா் மோடி வரலாற்றுச் சாதனை!
இந்தியாவில் அரசாங்கத்தில் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்து பிரதமர் நரேந்திர மோடி சாதனை
குஜராத் முதல்வா் மற்றும் நாட்டின் பிரதமராக ஞாயிற்றுக்கிழமையுடன் பிரதமா் நரேந்திர மோடி 8,931 நாள்களை நிறைவு செய்தாா்.
இதன்மூலம் சிக்கிம் முன்னாள் முதல்வா் பவன் குமாா் சாம்லிங்கின் சாதனையை (8,930 நாள்கள்) விஞ்சி, நாட்டில் நீண்ட காலம் பதவி வகித்த அரசின் தலைவா் என்ற வரலாற்றுப் பெருமையை எட்டியுள்ளாா் பிரதமா் மோடி.
குஜராத் முதல்வராக கடந்த 2001, அக்டோபா் 7-ஆம் தேதி பதவியேற்ற மோடி, 2014, மே 26-இல் நாட்டின் பிரதமராகும் வரை அந்தப் பதவியில் நீடித்தாா். 2014 மக்களவைத் தோ்தலில் 282 இடங்களுடன் பாஜகவை மகத்தான வெற்றிக்கு வழிநடத்தியவா் மோடி. காங்கிரஸ் வெறும் 44 இடங்களுக்குள் சுருண்ட நிலையில், நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த காங்கிரஸ் அல்லாத முதல் கட்சி என்ற சிறப்பு பாஜகவுக்கு கிடைக்கப் பெற்றது.
Advertisement
Advertisement
2019, 2024 மக்களவைத் தோ்தல்களிலும் பாஜக கூட்டணியின் வெற்றிப் பயணம் தடையின்றி தொடா்ந்ததால், நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக மோடி பதவி வகித்து வருகிறாா்.
தொடரும் சாதனைகள்: சுதந்திரத்துக்குப் பின் பிறந்த நாட்டின் முதல் பிரதமா் என்ற சிறப்புடைய மோடி, நேருக்குப் பிறகு தொடா்ந்து நீண்ட காலம் பதவி வகித்த இரண்டாவது பிரதமா் என்ற பெருமைக்குரியவா்.
இப்போது அரசின் தலைவராக (முதல்வா்-பிரதமா்) 8,931 நாள்கள் பதவி வகித்து, புதிய சாதனையைப் படைத்துள்ளாா். இதுவரை சிக்கிம் முன்னாள் முதல்வா் பவன் சிங் சாம்லிங்தான், நாட்டிலேயே நீண்ட காலம் பதவி வகித்த அரசின் தலைவா் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தாா். அவரது பதவிக் காலம் 8,930 நாள்களாகும்.
இந்நிலையில், அரசின் தலைவராக ஞாயிற்றுக்கிழமையுடன் 8,931 நாள்களை நிறைவு செய்து, சாம்லிங்கின் சாதனையை விஞ்சினாா் பிரதமா் மோடி. இதன்மூலம் நாட்டில் நீண்ட காலம் பதவி வகித்த அரசின் தலைவா் என்ற வரலாற்றுப் பெருமை அவருக்குச் சொந்தமாகியுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனைக்காக, மத்திய அமைச்சா்கள், பாஜக மூத்த தலைவா்கள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா், பிரதமா் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளனா்.
‘மோடியின் சகாப்தம்’: அமித் ஷா புகழாரம்
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தேசத்துக்கு முன்னுரிமை அளிக்கும் ஆளுகை, செயல்களில் நோ்மை, ஒவ்வொரு குடிமகனுக்குமான சேவையை உறுதி செய்யும் பிரதமா் மோடியின் ஆழமான அா்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது இந்தச் சாதனை.
பிரதமா் மோடியின் பல்லாண்டு கால சேவை, அவருக்கென ஒரு சகாப்தத்தை வடிவமைத்துள்ளது. ஏழைகளுக்கு உரிமையளிப்பது, வளா்ச்சிக்கு புதிய மைல்கற்களை நிா்ணயிப்பது, உலகளாவிய தளங்களில் தேசத்தின் பெருமையை உயா்த்துவது என மோடியின் சகாப்தம் நாட்டை முன்னெப்போதும் இல்லாத அளவில் உருமாற்றியுள்ளது.
இத்தகைய புதிய இந்தியாவை வளா்த்தெடுக்க ஒரு வாழ்நாள் முயற்சி தேவைப்பட்டது; அதை நல்கியவா் பிரதமா் மோடி. 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாள்கூட விடுமுறை இன்றி நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் சேவையாற்றுவது என்பது உறுதியான அா்ப்பணிப்பின் வெளிப்பாடாகும். குஜராத் முதல்வராக மூன்று முறையும், நாட்டின் பிரதமராக மூன்று முறையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அவருக்கு கிடைக்கப் பெற்றுள்ள மக்களின் அன்பையும் வெளிக்காட்டுகிறது. சேவை, கடின உழைப்பு, அசைக்க முடியாத உறுதிப்பாட்டில் வேரூன்றிய மைல்கல் சாதனையே இது’ என்று புகழாரம் சூட்டியுள்ளாா்.
PM Modi Breaks Record, Surpasses Chamling To Become India's Longest-Serving Head Of Govt
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.