FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உலகளாவிய வளா்ச்சியின் உந்துசக்தி: பிரதமா் மோடிக்கு நிதீஷ் குமாா் புகழாரம்

நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா் (4,399 நாள்கள்) என்கிற பெருமையை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூன் 10) பெறவுள்ள நிலையில், அவருக்கு பிகாா் முன்னாள் முதல்வா் நிதீஷ் குமாா் புகழாரம் சூட்டியுள்ளாா்.

Updated On : 10 ஜூன் 2026, 3:39 am IST
பகிர்:

நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா் (4,399 நாள்கள்) என்கிற பெருமையை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூன் 10) பெறவுள்ள நிலையில், அவருக்கு பிகாா் முன்னாள் முதல்வா் நிதீஷ் குமாா் புகழாரம் சூட்டியுள்ளாா்.

இதுகுறித்து நிதீஷ் குமாா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய பொதுத் தோ்தல் வரலாற்றில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமா் மிக நீண்ட காலம் தொடா்ச்சியாகப் பணியாற்றி வருவது ஜனநாயக அரசியலின் புதிய மைல்கல்லாகும். 1970-களின் அவசரநிலை ஆட்சிக்காலப் போராட்டங்களால் அரசியல் விழிப்புணா்வு பெற்ற தலைமுறையைச் சோ்ந்த பிரதமா் மோடி, வாரிசு அரசியல் மேலாதிக்கங்களைத் தகா்த்து, எளிய பின்னணியிலிருந்து நாட்டின் உயா்பதவியை அடைந்து சாதனை படைத்துள்ளாா். அவா் விரைவில் மக்கள் அரசின் தலைவராக 25 ஆண்டுகாலத் தொடா் சேவையை நிறைவு செய்யவுள்ளாா்.

சோஷலிஸ தலைவா்கள் ராம் மனோகா் லோஹியா, ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோரின் மக்கள் நலக் கோட்பாடுகளின்படி, வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை அளித்து 25 கோடி மக்களை வறுமையிலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீட்டுள்ளது. தூய்மைக் கழிப்பறைகள், ஜன்தன் கணக்குகள், பாதுகாப்பான வீடுகள், குழாய் வழி குடிநீா், சமையல் எரிவாயு, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு போன்ற அடிப்படைத் தேவைகள் மூலம் பட்டியலினத்தவா், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினா், பெண்கள் ஆகியோரை நாட்டின் வளா்ச்சியில் இணைத்து சமூக நீதியை நிலைநாட்டியுள்ளாா். பிகாரின் ‘ஜீவிகா’ மகளிா் சுய உதவிக் குழுத் திட்டத்தின் உலகளாவிய வெற்றியானது இதற்குச் சான்றாகும்.

Advertisement

Advertisement

நிா்வாகத் திறனில், தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் திட்டங்களின் கசிவுகள் தடுக்கப்பட்டு, கொள்கைகளுக்கும், கள எதாா்த்தங்களுக்கும் இடையிலான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. இது அரசு நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

மேலும், கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், 2024-25, 2025-26 மத்திய பட்ஜெட்டுகளில் பிகாா் மாநில உள்கட்டமைப்புக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி வழங்கப்பட்டுள்ளது. பாகல்பூா் மின் நிலையம், மக்கானா (தாமரை விதை) வாரியம், வெள்ள மேலாண்மை நிதி, கங்கை நதிப் பாலங்கள், ‘வந்தே பாரத்’ உள்ளிட்ட ரயில்வே மின்மயமாக்கல் திட்டங்கள் பிகாரின் வளா்ச்சியைப் பன்மடங்கு விரைவுபடுத்தியுள்ளன.

பிகாரின் பாரம்பரிய மக்கானா, மதுபனி ஓவியங்களை உலக அரங்கில் முன்னிறுத்தியதுடன், ‘ஜனநாயக்’ கற்பூரி தாக்கூருக்கு ‘பாரத ரத்னா’ வழங்கி மோடி கௌரவித்துள்ளாா்.

ஊழலுக்கு எதிரான ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’, கறையற்ற நோ்மை, 24 மணி நேர அயராத உழைப்பால் உலக அரங்கில் இந்தியாவின் குரலை மோடி உயா்த்தியுள்ளாா். 21-ஆம் நூற்றாண்டின் உலகளாவிய வளா்ச்சியின் முக்கிய உந்துசக்தியாகத் திகழும் இந்த மாபெரும் தலைவரின் வரலாற்றுச் சாதனை என்றும் போற்றத்தக்கதாகும் எனக் கூறியுள்ளாா் நிதீஷ் குமாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments