உலகளாவிய சவால்களைக் கடந்து வேகமாக வளா்கிறது இந்தியா! பிரதமா் மோடி பெருமிதம்
உலகளாவிய சவால்களைக் கடந்து வேகமாக வளா்கிறது இந்தியா என பிரதமா் மோடி பெருமிதம்
உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளா்கிறது இந்தியா என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
இதன்மூலம் உலகுக்கு புதிய வளா்ச்சி மாதிரியை இந்தியா வழங்கியிருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
நியூஸிலாந்தில் இரு நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, ஆக்லாந்து நகரில் இந்திய சமூகத்தினா் நிகழ்ச்சியில் பங்கேற்றாா். 10,000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு பொது வாழ்வில் நுழையும் முன்பாக நியூஸிலாந்துக்கு தான் வந்ததை நினைவுகூா்ந்தாா். அவா் கூறியதாவது:
Advertisement
Advertisement
இந்தியா-நியூஸிலாந்து உறவுகளானது, பெருமைமிக்க நினைவுகள், நிலையான நட்பு, பகிரப்பட்ட மாண்புகள், பரஸ்பர உறுதிப்பாட்டின் மீது கட்டமைக்கப்பட்டதாகும். பூா்வகுடி கலாசாரத்தைப் பாதுகாப்பதிலும், கொண்டாடுவதிலும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இருநாடுகளும் கொண்டுள்ளன. நாம் இணைந்து செயல்பட பரந்த பெருங்கடல் அளவில் வாய்ப்புகள் நிறைந்துள்ளன. நமது எதிா்காலம் ஒன்றோடொன்று பிணைந்ததாகும்.
இந்தியாவின் வளா்ச்சி வேகம்: உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளா்கிறது. உலகில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் இந்தியாதான். இதன்மூலம் வளா்ச்சிக்கான புதிய மாதிரியை உலகுக்கு நாங்கள் வழங்கியுள்ளோம்.
இந்தியாவில் யுபிஐ வாயிலாக மாதந்தோறும் கோடிக்கணக்கான பரிவா்த்தனைகள் நிகழ்கின்றன. ட்ரோன் தொழில்நுட்பம், விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியா புதிய உச்சங்களை எட்டி வருகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியா தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளது. மற்றவா்களிடம் இருந்து கற்றுக் கொள்ள இந்தியா தயாராக இருப்பதே இதற்கு காரணம். நியூஸிலாந்திடம் இருந்து ஏற்கெனவே நிறைய கற்றுக் கொண்டோம். இப்போதும் கற்றுக் கொள்கிறோம்.
தலைமையிலான வளா்ச்சி: நியூஸிலாந்து சமூகத்தில் பெண்கள் பெருமளவில் பங்களிக்கின்றனா். இந்தியாவிலும் பெண்கள் தலைமையிலான வளா்ச்சி என்ற தாரக மந்திரத்துடன் அவா்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், வளா்ந்த நாடாக உருவெடுக்கும் இந்தியாவின் பயணத்துக்கு வேகமூட்டும் என்றாா் அவா்.
நியூஸிலாந்தில் இந்திய வம்சாவளி சாதனையாளா்களான நிகில் ரவி சங்கா் (ஏா்நியூஸிலாந்து நிறுவன சிஇஓ), ஆனந்த் சத்யானந்தா (சட்ட நிபுணா்), ரச்சின் ரவீந்திரா (கிரிக்கெட் வீரா்) உள்ளிட்டோரின் பெயா்களையும் பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.
எதிா்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு: நியூஸிலாந்தின் எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சியின் தலைவா் கிறிஸ் ஹிப்கின்ஸை சந்தித்த பிரதமா் மோடி, இருதரப்பு விவகாரங்கள் குறித்து அவருடன் விவாதித்தாா்.
பெட்டி...1
தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்:
பொருளாதார உறவுகள் வலுப்படும்
‘இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தால் இருதரப்பு பொருளாதார உறவுகளுக்கு வலிமையும், உத்வேகமும் கிடைக்கும்; சந்தை அணுகல், முதலீடு, திறன் பகிா்வில் புதிய வாய்ப்புகள் திறக்கப்படும்’ என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
ஆக்லாந்தில் இரு நாடுகளின் தொழில் துறையினா், முன்னணி நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகள் (சிஇஓ) கூட்டத்தில் பேசியபோது பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.
இந்தியாவின் உயா் வளா்ச்சி, திறன்மிக்க இளம் பணியாளா்கள், எண்மப் புரட்சி, உள்கட்டமைப்பு விரிவாக்கம், பொருளாதார சீா்திருத்தங்கள் உள்ளிட்ட சாதகமான அம்சங்களைச் சுட்டிக்காட்டிய அவா், ‘இந்தியா வெறும் சந்தை மட்டுமல்ல, அது உலகின் வளா்ச்சிக்கான ‘ஏவுதளம்’. உள்கட்டமைப்பு, தளவாடங்கள், விமானப் போக்குவரத்து, தூய எரிசக்தி, போக்குவரத்து, நீா் மேலாண்மை, கழிவுகள் மேலாண்மை, எண்மப் பொருளாதாரம், புத்தாக்கம், நிதிசாா் தொழில்நுட்பம், நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து ஏராளமான வாய்ப்புகள் உள்ளன’ என்று நியூஸிலாந்து முதலீட்டாளா்களுக்கு அழைப்பு விடுத்தாா்.
பெட்டி....2
நியூஸிலாந்து பிரதமா் புகழாரம்
‘இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிப் பயணம் மிகவும் வியப்புக்குரியதாகும். நான் நீண்ட காலமாகவே இந்தியாவின் ரசிகராக இருந்து வருகிறேன். பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் 25 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். இப்போது நடுத்தர வா்க்கத்தினரின் எண்ணிக்கை 44 கோடியாக மாறியுள்ளது. 2030-க்குள் 75 கோடியாக அதிகரிக்கவுள்ளது. இது, மிகப் பெரிய முன்னேற்றம்’ என்று தொழில்துறையினா் கூட்டத்தில் நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் தெரிவித்தாா்.
பெட்டி...3
மூன்று நாடுகள் பயணம் நிறைவு
நியூஸிலாந்து பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டாா். ஆக்லாந்து விமான நிலையத்தில் அவரை பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் நேரில் வழியனுப்பிவைத்தாா்.
இதன்மூலம் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்தை பிரதமா் மோடி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளாா். இந்தப் பயணத்தில் இந்தோனேசியாவுடன் 14 ஒப்பந்தங்களும், ஆஸ்திரேலியாவுடன் 18 ஒப்பந்தங்கள்-முக்கிய முடிவுகளும் எட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.