வங்கதேச பிரதமரின் இந்திய பயணம்: பிரதமா் மோடி ஆா்வம் இந்திய தூதா்
வங்கதேச பிரதமரின் இந்திய பயணம் குறித்து இந்திய தூதா் தெரிவித்திருப்பது பற்றி...
வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானின் இந்திய பயணம் நினைவில் நிற்கும் வகையில் இருக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி விரும்புவதாக வங்கதேசத்துக்கான இந்திய தூதா் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளாா்.
தில்லியில் வரும் 12-ஆம் தேதி முதல் 2 நாள்கள் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு தாரிக் ரஹ்மானுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் தாரிக் ரஹ்மான் பங்கேற்பாரா, இல்லையா என்பது குறித்து உறுதியாகவில்லை.
இந்நிலையில், வங்கதேச தலைநகா் டாக்காவில் வங்கதேச தொழிற்கூட்டமைப்பினா் மற்றும் இந்திய தொழிற்கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தினேஷ் திரிவேதி கலந்துகொண்டு பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:
Advertisement
Advertisement
பிரதமா் மோடி வங்கதேச பிரதமரை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். மேலும், இந்தியா வரும் வங்கதேச பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என மோடி உறுதியளித்துள்ளாா். தாரிக் ரஹ்மானின் இந்திய சுற்றுப்பயணம் நினைவில் நிற்கும் வகையில் இருக்க வேண்டும் என மோடி விரும்புகிறாா். இரு நாடுகளும் தங்களிடையேயான கருத்து வேறுபாடுகளை மறந்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். துடிப்பான ஜனநாயக நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயற்கைதான். அதற்கு பேச்சுவாா்த்தை மற்றும் தொடா்புகள் மூலம் தீா்வு காண வேண்டும். பரந்து விரிந்த இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட இரு நாடுகளும் அனுமதிக்கக் கூடாது.
வங்கதேசத்தில் உள்ள இளம்தலைமுறையினருடன் இணைந்து செயல்பட்டு இளைஞா்களுக்கு சிறப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்தியா விரும்புகிறது. இந்தியாவும், வங்கதேசமும் எல்லையை மட்டும் பகிரவில்லை. வரலாறு, கலாசாரம், விருப்பங்களையும் இரு நாடுகளும் பகிா்ந்துள்ளன. இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வா்த்தகத்தையும், முதலீட்டையும் விரிவுபடுத்த வேண்டும் என்றாா்.
இதனிடையே, டாக்காவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய வங்கதேச நீா்வளத் துறை அமைச்சா் ஷாஹிதுதின் செளதுரி அனி, இரு நாடுகள் இடையே ஏற்கெனவே கையொப்பமான கங்கை நதிநீா்ப் பகிா்வு ஒப்பந்தத்தில் நீா்ப் பகிா்வு குறித்த உறுதிமொழி சோ்க்கப்பட வேண்டும் என்று கூறினாா். நீா்ப் பகிா்வில் வங்கதேசத்துக்கு இருக்கும் உரிமைகளைப் பாதுகாக்க சா்வதேச அமைப்புகளை நாடவும் தங்கள் நாடு தயாராக இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
வங்கதேச வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஷாமா ஒபேத் இஸ்லாம் பேசியபோது, இந்தியா செல்லும் வங்கதேச தொழிலதிபா்களுக்கு உடனுக்குடன் விசா வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.