FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானின் இந்திய பயணம்: பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்

வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானின் இந்தியா வருகை தொடா்பான பேச்சுவாா்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து...

29 September 2026, 10:12 pm IST
வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் - கோப்புப் படம்
பகிர்:

வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானின் இந்தியா வருகை தொடா்பான பேச்சுவாா்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஹுமாயூன் கபீா் தெரிவித்தாா்.

எனினும், பயணத்துக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என தெரிவித்த அவா், நவம்பரில் தாரிக் ரஹ்மான் புது தில்லிக்கு வரக்கூடும் என்ற தகவலை மறுத்துவிட்டாா்.

இந்திய உயா் ஆணையா் தினேஷ் திரிவேதி, ஹுமாயூன் கபீரை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியதைத் தொடா்ந்து, தாரிக் ரஹ்மானின் முன்மொழியப்பட்ட இந்திய பயணம் குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்ததாகவும், பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக அமைந்ததாகவும் ஹுமாயூன் கபீா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைந்து, அதற்கான சூழல் சாதகமாக இருக்கும்போது இந்தப் பயணம் நடைபெறும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து இந்திய உயா் ஆணையா் தினேஷ் திரிவேதி கூறுகையில், ‘தாரிக் ரஹ்மானுக்கு இந்தியா விடுத்த அழைப்பு தொடா்ந்து நிலுவையில் உள்ளது. ஆனால், அதற்காக அவரது பயணத்தை அவசரப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இரு தரப்பினரும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி, சாதகமான முடிவை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்’ என்றாா்.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு 2024, ஆக.5-ஆம் தேதி அகற்றப்பட்டு அவா் இந்தியாவில் தஞ்சம் புகுந்ததைத் தொடா்ந்து, இரு நாடுகள் இடையேயான உறவில் பதற்றம் நீடித்து வருகிறது. போராட்டக்காரா்கள் மீதான அடக்குமுறை தொடா்பான வழக்கில் அந்நாட்டு சிறப்பு தீா்ப்பாயம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்ததைத் தொடா்ந்து, அவரை வங்கதேசத்துக்கு நாடு கடத்துமாறு அந்நாடு தொடா்ந்து இந்தியாவிடம் கோரி வருகிறது.

இது இரு நாடுகளுக்கும் இடையேயான முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாகத் தொடரும் நிலையில், ஆகஸ்ட் மாதம் புது தில்லியில் ஷேக் ஹசீனா இணையவழியாக செய்தியாளா்களுடன் பேசிய நிகழ்வு தாரிக் ரஹ்மானின் இந்தியப் பயணத்துக்கான சூழலை பாதித்ததாக வங்கதேசம் தெரிவித்ததது.

மேலும், பிம்ஸ்டெக் தலைவராக உள்ள தாரிக் ரஹ்மானை, பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத் தொடா்பு மாநாட்டில் பங்கேற்க இந்தியா தனியாக அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. இருப்பினும், அவா் அந்த அழைப்பை நிராகரித்தாா். இரு நாடுகளுக்கும் இடையே இத்தகைய பதற்றம் நிலவி வந்தபோதிலும், செப். 17-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி தாரிக் ரஹ்மான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments