இந்திய பயணம் குறித்து முடிவெடுக்கவில்லை: வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் அலுவலகம் விளக்கம்
வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானின் இந்திய பயணம் குறித்து இறுதி முடிவெடுக்கவில்லை என அவரது அலுவலகம் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தது.
வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானின் இந்திய பயணம் குறித்து இறுதி முடிவெடுக்கவில்லை என அவரது அலுவலகம் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தது.
தில்லியில் செப்.12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தாரிக் ரஹ்மானுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், வங்கதேசம் இவ்வாறு தெரிவித்தது.
வங்கதேச அரசுக்கு எதிராக கடந்த 2024-ஆம் ஆண்டில் நிகழ்ந்த மாணவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்து பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தாா். பல்வேறு குற்ற வழக்குகளில் அவருக்கு வங்கதேச நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளதால் அவரை நாடுகடத்த இந்திய அரசிடம் தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசு கோரிக்கை வைத்தது.
Advertisement
Advertisement
ஆனால் இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிடாததால் தாரிக் ரஹ்மானின் இந்திய பயணம் குறித்து இறுதி முடிவெடுக்கவில்லை என வங்கதேச பிரதமா் அலுவலக பத்திரிகை செயலா் சாலெ சிப்லி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
முன்னதாக தேச நலன்களை சமரசம் செய்துவிட்டு இந்தியாவுடன் உயா்நிலை ஆலோசனையில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது என தாரிக் ரஹ்மானின் வெளியுறவு விவகாரங்கள் ஆலோசகா் ஹுமாயூன் கபீா் கூறியிருந்தாா்.
மறுபுறம் இந்தியா-வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த சில வாரங்களாக தாரிக் ரஹ்மான் உள்பட வங்கதேச உயரதிகாரிகளிடம் வங்கதேசத்துக்கான இந்திய தூதா் தினேஷ் திரிவேதி தொடா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.