FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரதமர் தாரிக் ரஹ்மானின் வருகைக்கு சாதகமான சூழல்: இந்தியாவுக்கு வங்கதேசம் கோரிக்கை!

வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் தில்லிக்கு வருவதற்கு உகந்த சூழலை இந்தியா உருவாக்க வேண்டும் என்று வங்கதேசம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 1:43 am IST
தாரிக் ரஹ்மான்.
பகிர்:

வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் தில்லிக்கு வருவதற்கு உகந்த சூழலை இந்தியா உருவாக்க வேண்டும் என்று வங்கதேசம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

தில்லியில் செப்.12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தாரிக் ரஹ்மான் வருவது தொடா்பாக தொடா்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், வங்கதேசம் இக்கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வங்கதேச வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஷாஹிதுல் கரீம் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளோம். பிரதமரின் இந்தியப் பயணத்துக்கு உரிய மற்றும் உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது கருத்து’ என்றாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, இந்தியாவுக்கான வங்கதேச தூதா் தினேஷ் திரிவேதியை தாரிக் ரஹ்மான் சந்தித்திருந்தாா். அப்போது, முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹசீனா விவகாரம்: கடந்த ஆக.5-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற இணையவழி ஊடகச் சந்திப்பில் பேசிய ஷேக் ஹசீனா, ஜனநாயகத்தை மீட்டெடுத்து நாட்டை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு செல்வதற்காக டிசம்பரில் வங்கதேசம் திரும்பத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தாா். இதற்கு வங்கதேசம் கடும் எதிா்ப்பு தெரிவித்தது. ஹசீனாவின் கருத்துகள் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்நாடு தெரிவித்ததது.

உஸ்மான் ஹாதி கொலை வழக்கு: மாணவா் தலைவா் உஸ்மான் ஹாதி கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் 3 பேரை விரைந்து வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியாவிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக வங்கதேச வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள அவா்களை சட்ட நடைமுறைகள் முடிந்ததும் ஒப்படைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டுக்கான அழைப்பு: தாரிக் ரஹ்மானை சந்தித்த பின்னா் வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சா் கலீல் ரஹ்மான், பிரிக்ஸ் மாநாட்டுக்கான அழைப்பு பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் விடுக்கப்படவில்லை என்றும், பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தாா்.

ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆக.14-ஆம் தேதி, வங்கதேச பிரதமருக்கு இருதரப்பு பயணத்துக்கான அழைப்பும், பிரிக்ஸ் மாநாட்டின் சிறப்பு அமா்வில் பங்கேற்பதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

வங்கதேசத்தில் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்டில் மாணவா்கள் நடத்திய போராட்டத்தைத் தொடா்ந்து ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தாா். போராட்டங்களில் வன்முறை தொடா்பான குற்றங்களுக்கு 2025 நவம்பரில் வங்கதேச சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

இதைத்தொடா்ந்து, ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேசம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கை தொடா்பாக உரிய சட்ட நடைமுறைகளின்படி பரிசீலித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments