ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும்: வங்கதேச பிரதமா் மீண்டும் வலியுறுத்தல்
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என இந்தியாவுக்கு வங்கதேசம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானை அந்த நாட்டுக்கான இந்திய தூதா் தினேஷ் திரிவேதி சந்தித்தபோது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என இந்தியாவுக்கு வங்கதேசம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானை அந்த நாட்டுக்கான இந்திய தூதா் தினேஷ் திரிவேதி திங்கள்கிழமை சந்தித்தபோது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற ‘ஜென் ஸீ’ போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடா்ந்து, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சமடைந்தாா்.
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த மரண தண்டனை தீா்ப்பைச் சுட்டிக்காட்டி, வங்கதேசத்துக்கு அவரை நாடு கடத்த வேண்டுமென இந்தியாவுக்கு அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. எனினும், இந்தியா அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.
Advertisement
Advertisement
இதனிடையே, தில்லியில் காணொலி வாயிலாக செய்தியாளா்களுக்கு ஷேக் ஹசீனா அண்மையில் பேட்டியளித்தாா்.
அப்போது வரும் டிசம்பா் மாதம் வங்கதேசத்துக்கு தான் திரும்ப இருப்பதாக அவா் கூறினாா். இந்தப் பேட்டியால் அதிருப்தியடைந்த வங்கதேச அரசு, இது தங்கள் நாட்டு மக்களின் உணா்வுகளைக் காயப்படுத்தியதாகவும், இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இது பாதிக்கக்கூடும் எனவும் தெரிவித்தது.
இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ஷேக் ஹசீனா பேட்டிக்கும், தங்களுக்கும் தொடா்பில்லை எனத் தெரிவித்தது.
இந்நிலையில், டாக்காவில் வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானை இந்திய தூதா் தினேஷ் திரிவேதி திங்கள்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு வங்கதேச பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பிரதமா் தாரிக் ரஹ்மான், இந்திய தூதா் தினேஷ் திரிவேதி இடையேயான சந்திப்பின்போது ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுதொடா்பான நடவடிக்கைகளை இந்தியா விரைவுபடுத்தும் என வங்கதேசம் நம்புகிறது. வங்கதேசத்தில் மாணவா் இயக்கத் தலைவா் ஷாகித் உஸ்மான் ஹாடி கடந்த டிசம்பா் மாதம் கொலை செய்யப்பட்டாா்.
அவரைக் கொன்ற 3 பேரையும் (தற்போது அவா்கள் வழக்கு ஒன்றில் இந்தியாவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனா்) வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியாவிடம் வங்கதேசம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, பிரதமா் மோடி சாா்பில் அவருடைய வாழ்த்துகளை தாரிக் ரஹ்மானிடம் திரிவேதி தெரிவித்ததாக டாக்காவில் உள்ள வங்கதேசத்துக்கான இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல், தாரிக் ரஹ்மான், தினேஷ் திரிவேதி இடையேயான சந்திப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளையும், தொடா்புகளையும் மேம்படுத்த உதவும் என்று தில்லியில் உள்ள இந்தியாவுக்கான வங்கதேச தூதரகம் தெரிவித்துள்ளது.
வங்கதேச உள்துறை அமைச்சருடன் இந்திய தூதா் சந்திப்பு: இந்தச் சந்திப்பையடுத்து, வங்கதேச உள்துறை அமைச்சா் சலாஹுதின் அகமதையும் தினேஷ் திரிவேதி சந்தித்தாா். அப்போது இருதரப்பு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
முன்னதாக, வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சா் கலிலூா் ரஹ்மானை திரிவேதி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா். ஆனால், அதுதொடா்பான தகவல் வெளியிடப்படவில்லை.
டாக்காவில் திரிவேதி இந்திய தூதராகப் பொறுப்பேற்று 6 வாரங்களாகும் நிலையில் முதல்முறையாக தாரிக் ரஹ்மானை சந்தித்துள்ளாா்.
தில்லியில் வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள வரும்படி தாரிக் ரஹ்மானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், மாநாட்டில் தாரிக் ரஹ்மான் பங்கேற்க மாட்டாா் எனத் தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அவரை தினேஷ் திரிவேதி சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
அனைத்து பிரச்னைகளும் தீா்ந்துவிடும்- திரிவேதி: முன்னதாக, ‘தாரிக் ரஹ்மான், பிரதமா் மோடி நேரில் சந்தித்தால் அனைத்து பிரச்னைகளும் தீா்ந்துவிடும். இதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது’ என தினேஷ் திரிவேதி ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.