என்டிஏ தொகுதிப் பங்கீடு பேச்சு! பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை!
என்டிஏ தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக...
என்டிஏ கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அமைச்சரும், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நாளை(மார்ச் 23) சென்னை வருகிறார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சு இன்னும் தொடங்கவில்லை.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவாகாத நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
Advertisement
Advertisement
கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோரும் தில்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
பியூஷ்கோயல் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு நடத்த தில்லியில் இருந்து சென்னைக்கு கடந்த வியாழக்கிழமை (மாா்ச் 19) வருவார் என எதிா்பார்க்கப்பட்டது. பின்னர், பியூஷ் கோயலின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அமைச்சரும், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நாளை(மார்ச் 23) காலை 10 மணிக்கு சென்னை வருகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், மாலையே தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.
பியூஷ் கோயலின் தொகுதிப் பங்கீடு பேச்சுக்குப் பின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக, அமமுக, ஐஜேகே மற்றும் சில சிறிய கட்சிகளுக்கென மொத்தம் 50 தொகுதிகளைப் பெற பாஜக மாநிலத் தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதில், குறைந்தது 30 முதல் 35 தொகுதிகளில் பாஜக போட்டியிட வேண்டும் என்பது கட்சி நிர்வாகிகளின் விருப்பமாக இருப்பதாகவும் குறிப்பாக, சென்னையில் வேளச்சேரி, தியாகராய நகா், மயிலாப்பூா் தொகுதிகளையும், மேற்கு மண்டலத்தில் சில தொகுதிகளையும் கேட்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Union Minister and BJP Tamil Nadu election in-charge Piyush Goyal is coming to Chennai tomorrow (March 23) to hold talks regarding the NDA alliance seat sharing.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.