முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் சிகை அலங்கார தொழிலாளர்கள் முற்றுகை

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் சிகை அலங்கார தொழிலாளர்கள் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:06 PM
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட திருநெல்வேலி மாவட்ட சிகை அலங்கார தொழிலாளர் நலச்சங்கத்தினர்.
பகிர்:

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் சிகை அலங்கார தொழிலாளர்கள் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. வாக்குஎண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படவில்லை. 
இருப்பினும் திங்கள்கிழமை ஏராளமான மக்கள் வந்து ஆட்சியர் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டிருந்த மனுப்பெட்டியில் கோரிக்கை மனுக்களை போட்டுச் சென்றனர்.
திருநெல்வேலி மாவட்ட சிகை அலங்காரத் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்து முற்றுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மனுப்பெட்டியில் மனு அளித்த பின்பு செய்தியாளர்களிடம் கூறியது: இம் மாவட்டத்தில் சிகை அலங்கார தொழிலை நம்பி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளோம். 
கடந்த ஆண்டில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலைவாய்ப்பை இழந்து குடும்பம் நடத்தவே இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண உதவித்தொகை கூட பல தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. 
அந்தப் பொருளாதார பின்னடைவில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாத சூழலில் மீண்டும் முடித்திருத்தும் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது. 
கரோனா நோய்த்தொற்றின் வீரியத்தை நன்கு அறிந்துள்ளோம். ஆகவே, கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து முடித்திருத்தும் கடைகளைத் திறக்க அனுமதியளிக்க வேண்டும். நேரக்கட்டுப்பாடுகள் உள்ளிட்ட புதிய விதிகளை வகுத்துக் கொடுத்தாலும் பின்பற்ற தயாராக உள்ளோம் என்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.