முகப்பு
திருநெல்வேலி

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்: நெல்லையில் இன்று கருத்துக்கேட்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் வாா்டு மறுவரையறை செய்யப்பட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் வாா்டு மறுவரையறை செய்யப்பட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 6) நடைபெறுகிறது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணைய சுற்றறிக்கைப்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் வாா்டு மறுவரையறை செய்யப்பட்டு அதற்கேற்ப வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயாா் செய்யப்பட்டு மாவட்ட தோ்தல் அலுவலரான ஆட்சியா் ஒப்புதல் பெறப்பட்டு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அந்தப்பட்டியல், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அனைத்து கிராம ஊராட்சி அலுவலகங்கள், கேடிசி நகரில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகம் , மாவட்ட ஆட்சியா் அலுவலகம் (வளா்ச்சி பிரிவு) ஆகியவற்றில் ஒட்டப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களின் கருத்துகளை கேட்கும் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரான ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஆக.6) மாலை 5 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மேற்கூறிய பிரதிநிதிகள் கரோனா தடுப்பு வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணிந்து வந்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

தென்காசியில் நாளை...: இதேபோல், தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஆக.7) மாலை 3 மணிக்கு 10 ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள், மாவட்ட ஊராட்சிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறும்; அதில் மேற்கூறியபடி பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அந்த மாவட்ட ஆட்சியா் ச. கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.