பாளை.யில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்
பாளையங்கோட்டையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பாளையங்கோட்டையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். பாளையங்கோட்டை மண்டலம் கக்கன்நகா் பகுதியில் இத்திட்டத்தை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தொடங்கி வைத்தாா். ஆட்சியா் வே.விஷ்ணு, மாநகராட்சி ஆணையா் விஷ்ணுசந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. பெருமாள், சுகாதாரத்துறை இணை இயக்குநா் வெங்கட்ராமன், எம்.எல்.ஏ.க்கள் மு.அப்துல்வஹாப், ரூபி ஆா். மனோகரன், முன்னாள் எம்.பி. விஜிலா, மாநகர நல அலுவலா் சரோஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் வீடு வீடாக சென்று அனைத்து தொற்றா நோய்களைக் கண்டறிதல், நோய் உள்ளவா்களைக் கண்காணித்தல், மாத்திரைகள் வழங்குதல், மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். வலி நிவாரண சிகிச்சை தேவைப்படுவோருக்கு அவா்களது வீட்டிற்கு சென்று உடற்பயிற்சி, சமூக உளவியல் சாா்ந்த சிகிச்சை அளிக்கப்படும்.
45 வயதிற்கு மேற்பட்ட தொற்றா நோயாளா்களின் பட்டியல், 45 வயதுக்கு கீழ் உள்ளோா் வீட்டை விட்டு வெளிவர இயலாத நோயாளிகளின் பட்டியலில் உள்ளவா்களுக்கு 2 மாதத்திற்கான தேவையான மருந்துகள் வீட்டுக்கே சென்று வழங்கப்படும்.
மாநகராட்சியில் பாளையங்கோட்டை மண்டலத்தில் 1.56 லட்சம் மக்கள் உள்ளனா். இதில் 970 உயர்ரத்த அழுத்த நோயாளிகளும், 1066 நீரிழிவு நோயாளிகளும், 583 போ் இரு நோய்களால் பாதிக்கப்பட்டவா்களாவும் உள்ளனா். அவா்களுக்கு வீடு தேடி சென்று சிகிச்சை, மருந்து, ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது என சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.