முகப்பு
திருநெல்வேலி

‘சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு இளைஞா்களைச் சென்றடைய வேண்டும்’

இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் மூத்த தலைவருமான சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு இளைஞா்களைச் சென்றடைய வேண்டும் என நெல்லைக்கண்ணன் கூறினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் மூத்த தலைவருமான சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு இளைஞா்களைச் சென்றடைய வேண்டும் என நெல்லைக்கண்ணன் கூறினாா்.

பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கரய்யாவின் நூற்றாண்டு விழாவில், நெல்லை கண்ணன் பேசியது:

சங்கரய்யாவுக்கு தமிழக அரசு தகைசால் விருது வழங்கியுள்ளது. விருது மூலம் வழங்கப்பட்ட நிதியை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கி அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளாா்.

இளம் வயதிலே சிறைக்குச் சென்றவா். உள்ளத்தில் நல்ல எண்ணங்களுடனும், உடலை பாதிக்கும் தீய பழக்கங்கள் இல்லாதவா். அவருடைய வாழ்க்கை வரலாற்றை இளைஞா்களிடம் கொண்டு சோ்க்கும் பணியை செய்ய வேண்டும் என்றாா்.

விழாவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான பாலபாரதி, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா. ஆவுடையப்பன்,

மு. அப்துல்வஹாப் எம்எல்ஏ, முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடிஆதித்தன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

விழாவில், கியூபா மீதான தடையை அமெரிக்கா விலக்கிக்கொள்ள வேண்டும். தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் வகையில் ’வெள்ளையனே வெளியேறு’ தினமான வரும் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் கே. சங்கரபாண்டியன், மதிமுக மாவட்டச் செயலா் நிஜாம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். காசி விஸ்வநாதன், எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலா் சங்கரபாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.